தீர்க்கதரிசன வாக்குத்தத்தம்
ஒரு நாளின் முதல் பகுதியோ, ஒரு மாதத்தின் முதல்
பகுதியோ அல்லது ஒரு வருடத்தின் முதல் பகுதியோ
தேவசமூகத்திற்கு செல்லும் போது, அந்த முழு
நாட்களுக்கான பரலோக தேவனுடைய ஆலோசனையை பெற்றுக் கொள்ளலாம். அதேபோல் எந்த ஒரு காரியத்தையும்
தொடங்குவதற்கு முன், தேவ சமூகத்தில் சென்று ஜெபிக்கும் போது, அந்தக் காரியத்தினை குறித்த
ஆலோசனைகளை பரலோக தேவன் கொடுப்பார். இதில் கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான காரியம்
ஒன்று உள்ளது. முதற்பகுதி தேவசமூகத்திற்குள் சென்றால்தான், தேவஆலோசனைகள் கிடைக்கும்.
மாறாக காரியத்தை நாமே தொடங்கி, நாமே செய்துவிட்டு,
பிரச்சனைகள் என்று வந்தவுடன் தேவ ஆலோசனைகளை
பெற நினைப்பது அந்த அளவுக்கு ஆசீர்வாதமாக இருக்காது. ஏனென்றால், உன் எல்லா விளைவின்
முதற்பலனாலும் கர்த்தரை கனம் பண்ணு என்று நீதிமொழிகள் 3:9 கூறுகின்றது. ஒரு நாளில் முதல் நேரம், மாதத்தின் முதல் நேரம்,
வருடத்தின் முதல் நேரம் தேவனுக்கு கொடுப்பது அவரை கனம் பண்ணுகின்றோம் என்று அர்த்தம்.
இந்த வருடத்தின் புதிய மாதத்தினை காணச்
செய்த தேவாதி தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் உண்டாகட்டும். இந்த மாதத்தின் முதல்
பகுதியில் தேவசமூகத்தில் அமர்ந்திருந்து, அவருக்கு சகல துதி, கன, மகிமையும் செலுத்தி
ஆராதித்து உயர்த்திய போது, அவர் கொடுத்த தீர்க்கதரிசன வாக்குத்தத்தினை இந்த வாக்குத்தத்த
செய்தியில் தொடர்ச்சியாக தியானிக்கலாம். ஜெபத்துடன் வாசியுங்கள் பரிசுத்த ஆவியானவர்
உங்களுடன் பேசுவார்.
ஏசாயா 58:11
கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத்
திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான
தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.
வாழ்க்கையில் கஷ்டம் என்ற ஒரு நிலைமை வந்தால்
போதும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நம்மை விட்டு பிரிந்து செல்வதை பார்க்க முடியும்.
ஆனால், நம்மை படைத்து, இந்த பொல்லாத பாவத்திலிருந்து இரட்சித்த தேவன் மகா வறட்சியான
காலங்களிலும் நித்தமும் நடத்துகின்றவராக இருக்கின்றார். மகா பஞ்சக் காலத்திலும் கைவிடாமலும், விட்டு விலகிச்
செல்லாமலும் நம்மை நடத்தி ஆத்துமாவை திருப்தியாக்குகின்றார். எலும்புகளை நிணம் உள்ளதாக்குகின்றார்.
நல்ல ஆகாரத்தினை கொடுத்து நம் வயிற்றைக் கூட
எளிதில் திருப்தியாக்கி விடலாம். ஆனால், ஆத்துமாவை
திருப்தியாக்குவது அவ்வளவு எளிதல்ல. அதுவும் பஞ்சக் காலத்தில் முடியவே முடியாது. ஆத்துமாவில்
பலவிதமான போராட்டங்கள் மற்றும் பல விதமான குழப்பங்கள் காணப்படும். இப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும் அவர் ஆத்மாவை திருப்தியாக்குகிறவராக இருக்கின்றார். அதை போல் பஞ்சக்காலத்தில் எலும்புகளை நிணமுள்ளதாக்குவது
கடினமாகும். மிக மிக சத்தான ஆரோக்கியமான ஆகாரத்தின் சாப்பிட்டால் மட்டுமே எலும்புகள்
நிணமுள்ளதாக மாறும். பஞ்சக் காலத்தில் அப்படிப்பட்ட கொழுத்த ஆகாரத்தினாலும் சத்தான
ஆகாரத்தினாலும் போஷிக்கின்றவராக இருக்கின்றார்.
இதை வாசிக்கின்ற நீங்களும் மகா வறட்சியான சூழ்நிலையில்
இருக்கலாம். வறட்சியான காலங்கள் உங்கள் வாழ்க்கையில்
வரலாம். எதுவாக இருந்தாலும் கவலைப்படாதீர்கள். பரலோக தேவன் உங்களை நித்தமும் நடத்தி, உங்கள் ஆத்மாவை
திருப்தியாக்கி, உங்கள் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார். நிச்சயமாகவே இதைச் செய்வார்.
இந்த மாதத்தில் இருந்து உங்கள் வாழ்க்கையில்
அனுபவிக்கலாம். நிச்சயமாகவே உங்கள் வாழ்க்கை
மாறும். ஆம்… கண்ணீரோடு கவலையோடு இருக்கின்ற உங்கள் வாழ்க்கை மாறும்.
சரி… யாரெல்லாம் இந்த வாக்குத்தத்த வசனத்தின் ஆசீர்வாதத்தினை
அனுபவிக்க முடியும்? யாரெல்லாம் இதை சுதந்தரிக்க முடியும்? என்பதனைக் குறித்து தொடர்ந்து
வாசிப்போம்.
ஈசாக்கின்
நாட்களிலும் கூட ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டாயிற்று. பஞ்சக்காலம் என்றாலே வேறு எங்காவது
போய் சஞ்சரிக்க வேண்டும் என்றும், வேறு எந்த தேசத்திற்காவது சென்று விடலாம் என்றும்
நினைப்பார்கள். அநேகர் இந்த நினைவுகளுக்கு
இடம் கொடுத்து, இந்த நாட்களில் வெளிநாடுகளில் சென்று வாழ்கின்றார்கள். அதே போல் எகிப்துக்கு
செல்ல வேண்டும் என்று ஈசாக்கு விருப்பமாக இருந்தான். அந்த நேரத்தில் தேவாதி தேவன் அவனுக்கு
தரிசனமாகி எகிப்துக்கு செல்லாமல், நான் சொன்ன
தேசத்தில் குடியிரு என்று சொன்னார். நான் சொல்லும்
தேசத்தில் வாசம்பண்ணு, நான் உன்னோடு கூட இருந்து உன்னை ஆசீர்வதிப்பேன். நான் உனக்கும்
உன் சந்ததிக்கும் இந்த தேசங்களை தந்து உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு இட்ட ஆணையை நிறைவேற்றுவேன்
என்று வாக்குத்தத்தங்களை கொடுத்தார்.
ஈசாக்கு
கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்தான். தேவன் சொன்ன தேசத்தில் விதை விதைத்தான். பஞ்சக் காலத்திலும்
தேவன் சொன்ன தேசத்தில் விதை விதைத்தான். அந்த
வருஷத்தில் நூறு மடங்கு பலன் அவனுக்கு கிடைத்தது. பஞ்ச காலத்தில் நூறு மடங்கு ஆசீர்வாதத்தினை பெற்றுக்
கொண்டான்.
பரலோக
தேவன் சொல்லுகின்ற வார்த்தைக்கு கீழ்படிகின்றவர்கள் பஞ்சக் காலத்திலும் நூறு மடங்கு
ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொள்வார்கள். பஞ்ச
நாட்களிலும் பரலோக தேவன் நடத்துவார். ஆத்துமாவை திருப்தியாக்குவார் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்.
தீர்க்கதரிசியாகிய எலியாவின் நாட்களிலும்
ஒரு பஞ்சக்காலம் வந்தது. இதை 1 இராஜாக்கள் 17 ஆம் அதிகாரத்தில் வாசிக்கலாம். ஈசாக்கு காலத்தில் வந்த பஞ்சத்தினை யார் அனுமதித்தார்கள்? அது பிசாசினால் வந்ததா அல்லது தேவன் அனுமதித்ததா என்பது நமக்கு சரியாக தெரியாது.
ஆனால், எலியாவின் காலத்தில் வந்த பஞ்சம் தேவன் அனுமதித்தது.
இஸ்ரேல் ஜனங்கள் இரண்டு நினைவுகளால் குந்தி
குந்தி நடந்தார்கள். எனவே, அந்த மக்களுக்கு ஒரு பாடத்தை புகட்டுவதற்காகவும்,
மெய்யான தேவன் யார் என்பதை காட்டுவதற்காகவும்
பரலோக தேவனை தன்னுடைய தீர்க்கதரிசியை அனுப்பி ஒரு பஞ்சத்தை அனுமதித்தார்.
அந்த பஞ்சக் காலத்திலும் எலியாவுக்கு கர்த்தருடைய வார்த்தை உண்டாகி இவ்விடத்தை விட்டு கீழ் திசையை நோக்கி போய் யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒழித்துக் கொண்டிரு. அந்த ஆற்றின் தண்ணீரை குடிப்பாய் என்றும் அங்கே உன்னை போஷிக்க காகங்களுக்கு கட்டளையிடுவேன் என்றார். கர்த்தருடைய வார்த்தையின்படியே அவன் அங்கே போய் கேரீத் ஆற்றின் அருகிலே தங்கி இருந்தான். காகங்கள் அவனுக்கு விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டு வந்ததன. தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரை குடித்தான் என்று வேதம் சொல்லுகின்றது. எலியா பஞ்ச காலத்திலும் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படிந்தான். பஞ்சக்காலத்திலும் தினமும் அப்பமும் இறைச்சியும் தாராளமாக சாப்பிட்டான். அவன் போஷிக்கப்பட்டான்.
எனவே, இதை வாசித்து தியானிக்கின்ற தேவனுடைய பிள்ளைகளே..! தேவன் நியமித்த பஞ்சகாலமாக இருந்தாலும் அல்லது மனிதர்களால் வந்த பஞ்சமாக இருந்தாலும் அல்லது பிசாசினால் வந்து பஞ்சகாலமாக இருந்தாலும் சரி. எப்படிப்பட்ட பஞ்சமாக இருந்தாலும் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியும்போது நாம் போஷிக்கப்படுவோம். எனவே கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிய ஒப்புக்கொடுப்போம். பரலோகத் தேவன் பெரியார் காரியத்தினை செய்வார்.
இதுவரை வெளிவந்த தீர்க்கதரிசன செய்திகளை வாசிக்க CLICK HERE
பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இந்தச் தீர்க்கதரிசன செய்தியும் ஆலோசனையும் உங்களுக்கு பிரயோஜனமாகவும் ஆசீர்வாதமாகவும் இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும். மேலும் தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள். இந்த ஊழியத்தினைப்பற்றி அறிந்துக்கொள்ளவும், ஜெபத்தேவைகள் மற்றும் ஜெப ஆலோசனைகளுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். CLICK HERE
Comments
Post a Comment