பிலேயாமின் வீழ்ச்சி
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறித்து அநேகர் தீர்க்கதரிசனமாக
உரைத்தார்கள். அதில் பிலேயாம் என்ற தீர்க்கதரிசியும்
ஒருவன். ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து
எழும்பும் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறித்து தீர்க்கதரிசனமாக
உரைத்தான். (எண்ணாகமம் 24:17). பாலாக் எனக்கு
தன் வீடு நிறைய வெள்ளியும், பொன்னும் தந்தாலும் சிறிய காரியமானாலும் பெரிய காரியமானாலும்
செய்யும்பொருட்டு, என் தேவனாகிய கர்த்தரின் கட்டளையை மீறக்கூடாது என்று சொல்லி தேவனுக்குள்ளாக
மிக வைராக்கியமாக இருந்தான்.( எண்ணாகமம் 22:18) நீதிமானைப் போல் மரிக்க வேண்டும் என்றும்,
அவர்களின் முடிவைப் போல் அவனுடைய முடிவும் இருக்க வேண்டும் என்றும் வாயினால் அறிக்கை
செய்தான்.( எண்ணாகமம் 23:10) அதுதான் அவனுடைய ஆசையாகவும் இருந்தது. கடைசியில் பட்டயத்தினால்
கொலைச் செய்யப்பட்டான். இஸ்ரவேல் ஜனங்கள் அவனைக் கொலை செய்தார்கள். துன்மார்க்கனைப்போல்
மரித்தான் (எண்ணாகமம் 31:8)
ஒரு தீர்க்கதரிசியை இஸ்ரவேல் மக்கள் ஏன் பட்டயத்தினால் கொலை செய்தார்கள்? பட்டயத்தினால்
கொலை செய்யப்பட காரணம் என்ன? பிலேயாமுடைய வாழ்க்கையில் நடந்தது என்ன? ஏன் அவன் வீழ்ச்சியடைந்தான்
போன்ற கேள்விகள் உங்களுக்கு வரலாம். இதற்கான பதிலை அறிந்துக் கொள்ள இந்த தீர்க்கதரிசன
செய்தியை கருத்தாக வாசியுங்கள் பரிசுத்த ஆவியானவர் உங்களுடன் பேசுவார்.
புறஜாதிகளிலிருந்து அழைக்கப்பட்டு வல்லமையாக பயன்படுத்தப்பட்ட தீர்க்கதரிசிதான் பிலேயாம் ஆவான். அவன் யாரை ஆசீர்வதிக்கின்றானோ அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவும் யாரை சபிக்கின்றானோ அவர்கள் சபிக்கப்பட்டவர்களாகவும் இருப்பார்கள். இப்படிப்பட்ட ஒரு அபிஷேகம் அவன் தலையின் மேல் இருந்தது. பரலோக தேவன் ஒரு தேசத்தையோ, பட்டணத்தையோ அல்லது ஒரு மனிதனையோ ஆசீர்வதிக்க நினைத்தாலும் அல்லது சபிக்க நினைத்தாலும் பிலேயாமை அனுப்பி ஆசீர்வதிப்பார் அல்லது சபிப்பார். இப்படி அவனுடைய நாட்களில் பயன்படுத்தப்பட்டான்.( எண்ணாகமம் 2:6)
இஸ்ரவேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாகி கானானை நோக்கி
பயணம் செய்தார்கள். அந்த பயணத்தின் போது மோவாபின் சமனான வெளிகளில் பாளையமிறங்கினார்கள்.
இதைக்கண்ட மோவாபின் இராஜாவும் அவனுடைய மக்களும் மிகவும் பயந்து கலங்கினார்கள். மாடு
எப்படி வெளியில் புல்லை மேய்ந்து போடுகின்றதோ, அப்படியே இவர்களும் தேசத்தை மேய்ந்து
போடுவார்களே என்பதுதான் அவர்களுடைய கலக்கத்திற்கு முக்கியமான காரணமாகும்.( எண்ணாகமம்
22:4)
ஒரு மனிதனை அழிக்க முடியவில்லை என்றால்,
முதலில் ஆவியில் ஒரு தாக்குதலை நடத்தின பின்பு, அவர்களை முறியடிப்பது பிசாசின் தந்திரங்களில்
ஒன்றாகும். இன்றைய நாட்களிலும் தன்னைவிட வலிமை உள்ளவர்களை அழிப்பதற்கு முதலில், மாந்திரீகம்,
பில்லிசூனியம், செய்வினை, ஏவல் போன்றவற்றினை செய்து ஆவியில் ஒரு தாக்குதலை நடத்தி,
அவர்களை அழிப்பார்கள். இதை நாம் பார்த்திருப்போம். காதுகளில் கேள்விப்பட்டிருப்போம்.
அதேப்போல் மோவாபும் இஸ்ரவேல் மக்களை அழிக்க வகைத்தேடினான். நேரடியாக அவனால் முடியாது.
முடியவே முடியாது. எனவே, முதலில் பிலேயாம் தீர்க்கதரிசியை அழைத்து அவனைக் கொண்டு, அவர்களை
சபித்த பின்பு, யுத்தம் செய்து அவர்களை முறியடிக்க வேண்டும் என்பது அவனுடைய இரகசிய
திட்டமாகும்.
இந்தத் திட்டத்தின்படி, பேயோரின் குமாரனாகிய பிலேயாமை அழைத்து வரும்படி தன்னுடைய
ஸ்தானாதிபதிகளை பெத்தூருக்கு அனுப்பினான். அவர்களும் சென்று பிலேயாமிடம் பாலாக்கின்
திட்டங்களை விரிவாக விளக்கிக் கூறினார்கள். அவனோ, இன்று இரவு இங்கே தங்கியிருங்கள்.
தேவனிடம் நான் விண்ணப்பம் செய்வேன்; அவர் உத்தரவு கொடுத்தால் மட்டுமே வருவேன்; இல்லையென்றால்
அங்கே வரமாட்டேன் என்று கூறினான். ஸ்தானாதிபதியாக சென்ற பாலாக்கின் பிரபுக்கள் அங்கே
இரவு தங்கினார்கள்.( எண்ணாகமம் 22:8)
இரவிலே தேவன் பிலேயாமிடத்தில் வந்து, உன்னிடத்தில் தங்கியிருக்கும் மனிதர்கள்
யார் என்று கேட்டார். எல்லாவற்றையும் பிலேயாம் கூறினான். அதற்கு தேவன் அவர்களோடு போகவும்
வேண்டாம், அந்த ஜனங்களை சபிக்கவும் வேண்டாம்; அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று
தன்னுடைய பரிபூரணத் திட்டத்தினை வெளிப்படுத்தினார்.( எண்ணாகமம் 22:12)
கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்த பிலேயாம் காலமே எழுந்து, மோவாபின் பிரபுக்களை
அவர்களுடைய தேசத்திற்கு அனுப்பி விட்டான். அவர்கள் பாலாக்கினிடத்தில் சென்று, நடந்தவற்றை
விவரித்துச் சொன்னார்கள். இன்னும் அதிக பணத்தையும், கனத்தையும் எதிர்பார்க்கின்றான்
என்று நினைத்த பாலாக், மறுபடியும் அதிக கனவான்களான பிரபுக்களை அவனிடத்தில் அனுப்பி,
உன்னை மிகவும் கனம் பண்ணுவேன்; நீர் சொல்லுவதெல்லாம் செய்வேன்; நீர் வந்து எனக்காக
அந்த ஜனங்களை சபிக்க வேண்டும் என்று சொல்லச் சொன்னான். அவர்களும் அவனிடத்தில் வந்து
பண ஆசையை தூண்டினார்கள்.( எண்ணாகமம் 22:17)
ஒரு முறை தேவனுடைய பரிபூரண திட்டம் வெளிப்பட்ட பின்பு அதற்கு அப்படியே முழுமனதோடு
கீழ்ப்படிய வேண்டும். மறுபடியும் மறுபடியும் அந்த காரியங்களில் தேவத்திட்டம் என்ன என்று
கேட்டு ஜெபிக்க கூடாது. அப்படி ஜெபிப்பது இருதய கடினத்தையும், தேவனுடைய பரிபூரண சித்தத்திற்கு
கீழ்ப்படிய முடியாத நிலைமையைத்தான் குறிக்கும். அங்கே செல்லக்கூடாது என்பதுதான் தேவனுடைய
பரிபூரணத் திட்டம் என்பது பிலேயாமுக்கு மிக நன்றாக தெரியும். ஆனாலும், பண ஆசைக்கு இடம்
கொடுத்து, கர்த்தர் இனி என்ன சொல்லுவார் என்பதனை அறிய, மறுபடியும் தேவ சமூகத்திற்கு
சென்றான். இதுவே அவனுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட முதல் பின்மாற்றம் ஆகும். (எண்ணாகமம்
22:19)
பண ஆசையினால் அவனுடைய இருதயம் கடினப்பட்டதை அறிந்த தேவன், அந்த மனிதர்கள் உன்னை
கூப்பிட்டால், நீ எழுந்து அவர்களுடன் செல். ஆனாலும் நான் உனக்கு சொல்லும் வார்த்தையின்படியே
சொல்ல வேண்டும் என்று கட்டளைக் கொடுத்து அனுப்பினார். இது அனுமதிக்கப்பட்ட சித்தமாகும்.
காலமே எழுந்து பிலேயாம் மிக ஆசையாக கழுதையின் மேல் சேணங்கட்டி, இரண்டு வேலைக்காரர்களை
தன்னுடன் கூட்டிக்கொண்டு, மோவாபின் பிரபுக்களோடு
அவர்களுடைய தேசத்திற்கு புறப்பட்டான்.
தேவனுடைய பரிபூரண திட்டத்தினை விட்டு விலகி, தேவனுடைய பிள்ளைகளை சபிக்க செல்கின்ற
பிலேயாமை பார்த்த தேவனுக்கு கோபம் மூண்டது.
எனவே, கர்த்தருடைய தூதனானவர் உருவின பட்டயத்தினை
பிடித்துக் கொண்டு அவனுக்கு எதிராளியாக வந்து நின்றார். இதைக் கண்ட கழுதை வழியைவிட்டு விலகி விலகி சென்றது.
வழிக்கு திருப்புவதற்காக மூன்று முறை பிலேயாம்
அடித்தான். உடனே, கழுதையின் வாயைத் திறந்தார். அது அவனோடு பேசி அவனுடைய மதிக்கேட்டை
உணர்த்தியது. உணர்வடைந்த பிலேயாம் முகங்குப்புற
விழுந்துப் பணிந்தான்; நான் பாவம் செய்தேன்; வழியிலே நீர் எனக்கு எதிராளியாக நிற்கின்றதை
அறியாதிருந்தேன். இப்போது உமது பார்வைக்கு தகாததாயிருக்குமானால் நான் திரும்பிப் போகிறேன்
என்று கூறினான்.
பிலேயாமைக் கொண்டு இஸ்ரவேல் மக்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்றும், தேவனுடைய
பிள்ளைகளை சபிக்க நினைத்த மோவாபியரையும், மோவாப் தேசத்தையும் சபிக்க வேண்டும் என்று
திட்டம் போட்ட தேவன், அந்த மனிதர்களோடு போ; நான் உனக்கு
சொல்லும் வார்த்தையை மாத்திரம் நீ சொல்லக்கடவாய் என்று சொல்லி அனுப்பினார். அவன் பாலாக்கின்
பிரபுக்களோடு மோவாப் தேசத்திற்கு சென்றான்.( எண்ணாகமம் 22:35)
பிலேயாமின் வருகையை மிக ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த
பாலாக் அவனை வரவேற்க தன் தேசத்தின் கடைசி எல்லை வரைக்கும் எதிர்க்கொண்டு போனான். அவனை
வரவேற்று மிகவும் கனம் பண்ணினான். வார்த்தையிலும் கனம் இருந்தது. கிரியைகளிலும் கனம்
இருந்தது. ஆடு, மாடுகளை அடித்து, உச்சிதமான உணவுகளைக் கொண்டு, விருந்து செய்து அவனை
கனப்படுத்தினான்.
மறுநாள் காலமே இஸ்ரவேல் மக்களை சபிப்பதற்காக பாலாக் பிலேயாமை கூட்டிக்கொண்டு,
பாகாலுடைய மேடுகளுக்கு சென்றான். அங்கிருந்து இஸ்ரவேல் மக்களுடைய கடைசி பாளையத்தைப்
பார்த்த பிலேயாம், அங்கேயே ஏழு பலிபீடங்களை கட்டி, ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும்
ஆயத்தப்படுத்தும்படிச் சொன்னான். அதன்படி, பாலாக் ஆயத்தப்படுத்தினான். இருவரும் சேர்ந்து
ஒவ்வொன்றாக பலியிட்டார்கள்.
அப்பொழுது பிலேயாமை சந்தித்த தேவன்
இஸ்ரவேல் மக்களை சபிக்க அனுமதி கொடுக்காமல் ஆசீர்வாதத்தை சொல்லக் கட்டளையிட்டார். பிலேயாமும்
வாயைத் திறந்து அவர்களை ஆசீர்வதித்தான். இதைக்கண்ட பாலாக்கிற்கு கடுமையான கோபம் மூண்டது.
அவர்களை சபிக்கும்படி உம்மை அழைப்பித்தேன்.
நீரோ அவர்களை ஆசீர்வதிக்கின்றீரே என்று கூறினான்.
பின்பு வேறொரு இடத்திற்கு சென்றார்கள்.
பாலாக் பிலேயாமை கூட்டிக் கொண்டு சென்றான். அங்கேயிருந்தாவது அந்த மக்களை எனக்காக சபிக்க
வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். ஆனாலும், சர்வவல்லதேவன் அவர்களை சபிப்பதற்கு அனுமதி
கொடுக்காமல், அதை ஆசீர்வாதமாக மாற்றினார். இப்படி மூன்று முறையும் இஸ்ரவேல் மக்களை
ஆசீர்வதித்தான். சாபத்தை ஆசீர்வாதமாக தேவன் மாற்றினார்.
இஸ்ரவேல் மக்கள் மீது ஆசீர்வாதம் திரும்புவதை பார்த்த பாலாக் பிலேயாமின் மேல்
கோபமூண்டவனாகி, கையோடு கை தட்டி, என் சத்துருக்களை சபிக்க அழைத்தேன்; நீயோ இந்த மூன்று
முறையும் ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தாய்; இனி இங்கே இராதே; உன் இடத்துக்கு ஓடிப்போ என்று
கூறிவிட்டான்.
முதலில் அவனுக்கு ராஜ மரியாதை கிடைத்தது. வாரும்,
போரும், நீர் என்று மரியாதையோடு கூப்பிட்டார்கள். பாலாக்கும் அப்படியே கூப்பிட்டான்.
ஆனால், தேவனுடைய சித்தத்தின்படி இஸ்ரவேல் மக்களை ஆசீர்வதிப்பதை கண்டவுடன், அவனுக்குரிய
மரியாதையை அப்படியே குறைத்து விட்டான். கையோடு
கைத்தட்டி கூப்பிடுவதும், வா, போ என்று ஒருமையில் பேசுவதுமாக இருந்தான்.
சமுதாயத்திலும் மற்ற மனிதர்களிடத்திலும் நல்ல கனத்தோடும், மரியாதையோடும் இருந்து
விட்டு, பின்பு கனம் மரியாதை குறையும் என்றால் எல்லாராலும் சகிக்க முடியாது. அதை தாங்கிக்கொள்ளவும்
முடியாது. இழந்துப்போன கனத்தையும், மரியாதையையும் எப்படியாவது திரும்ப பெற்றுக்கொள்ள
வேண்டும் என்று மனது துடித்துக்கொண்டே இருக்கும். அதேப்போல்தான் பிலேயாமுக்கு முதலில்
நல்ல மரியாதை, கனம் கிடைத்த இடத்தில் இப்பொழுது கிடைக்கவில்லை. எனவே அதை மறுபடியும்
பெற்றுக்கொள்ள நினைத்தான். அதை எப்படி பெற்றுக் கொள்ளலாம் என்று பலவாறு யோசித்தான்.
இஸ்ரவேல் ஜனங்களை சபிக்க தேவன் அனுமதி கொடுக்கவில்லை. இனியும் அனுமதிக்க மாட்டார்.
ஆகையால் ஒரு தந்திரமான யோசனையை பாலாக்கினிடத்தில் இரகசியமாக சொல்லிவிட்டு தன் தேசத்திற்கு
சென்றுவிட்டான்.
அவன் சொன்ன யோசனையின் படி மோவாபியர்கள் செய்தார்கள். இதனால் இஸ்ரேல் மக்களில்
இருபத்துநாலாயிரம் பேர் வாதையினால் செத்தார்கள்.( எண்ணாகமம் 25:9) தேவனுடைய பிள்ளைகளின்
கோபம் பிலேயாம் மீது மூண்டது. அவனை பட்டயத்தினால் வெட்டி கொன்றுப்போட்டார்கள். நீதிமானாக
மரிக்க வேண்டியவன் துன்மார்க்கனாக மரித்தான். ஆண்டவருக்காக வைராக்கியமாக இருந்தவனுடைய
முடிவு மிகவும் பரிதாபமாக இருந்தது. பிலேயாம் வீழ்ச்சியடைந்தான்.
(பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.)
தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன
செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல் பெற இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Glory to God
ReplyDelete