தீர்க்கதரிசன வாக்குத்தத்த செய்தி



 நம்மை நேசிக்கின்ற பரலோக தேவன் ஒவ்வொரு நாளும் நம்முடன் பேசி புதுப்புது வாக்குத்தத்தங்களையும், அபிஷேகத்தினை கொடுத்து நம்மை ஆசீர்வதிக்கின்றார். ஒவ்வொரு புது நாட்களிளும் தேதி மட்டுமே மாறும். ஆனால், புது மாதம் வரும்போது தேதி மற்றும் மாதத்தின் பெயர் மாறும். அதே நேரத்தில் புது வருடம் என்றால் தேதி மற்றும் மாதத்தின் பெயர்,  வருடம் மாறும். இப்படி பெரிய பெரிய மாற்றங்கள் வரும்போது பெரிய பெரிய வாக்குத்தத்தங்களை கொடுத்து, பரலோகத்தின் பெரிய பெரிய ஆசீர்வாதங்களையும்  கொடுப்பார்.

 சென்ற நவம்பர் மாதத்தினை முடித்து டிசம்பர் மாதத்திற்குள் வந்திருக்கின்றோம். 2024-ம் வருடத்தில் கடைசி மாதமாகும்.  இந்த நாட்களிலும் பரலோக தேவன் நமக்கு நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும் ஆயிரமடங்கு அதிகமாகும்படி உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொல்லியபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக என்ற உபாகமம் 1:11 ம் வசனத்தினை வாக்குத்தத்தமாக கொடுத்துள்ளார்.  இதன்படி ஆயிரம் மடங்கு ஆசீர்வாதத்தினை நமக்கு தந்து ஆசீர்வதிப்பாராக.

 நாம் ஆராதிக்கின்ற ஜீவனுள்ள தேவனாகிய கர்த்தர் மடங்கு மடங்காக ஆசீர்வதிக்கின்றவர். உலகத்தில் ஒரு மனிதனுக்கு கீழாகவோ அல்லது அரசாங்கத்திற்கு கீழாகவோ வேலை செய்கின்றவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக சம்பளம் உயரும். ஆனால், தேவசமூகத்தில் தேவதிட்டத்திற்காக காத்திருக்கின்றவர்களுக்கு  மடங்கு மடங்காக ஆசீர்வாதம் கிடைக்கும்.

 எனக்கு தெரிந்த ஒரு சகோதரர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்ததை சாட்சியாக பகிர்ந்து கொண்டார். அதை இப்பொழுது உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கின்றேன். அந்த சகோதரர் நன்கு படித்தவர். அவருடன் படித்த நண்பர்கள் படிப்பினை முடித்தவுடன் நல்ல வேலைக்கு சென்று, நல்ல சம்பளத்தினை வாங்கினார்களாம்.  இவரோ படிப்பு முடித்தவுடன் தேவசித்தத்திற்காக நான்கு வருடம் பொறுமையாக காத்திருந்தார். நான்கு வருடத்தில் அவருடைய நண்பர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பள உயர்வாக பெற்றுக் கொண்டிருந்தார்கள். நான்கு வருடம் கழித்து பரலோக தேவன் அந்த சகோதரனை அதாவது தேவசித்ததிற்காக காத்திருந்த சகோதரனை ஆசீர்வதிக்க தொடங்கினார். எப்படிப்பட்ட ஆசீர்வாதம்? மடங்கு மடங்காக பெருகும் ஆசீர்வாதம்.  அவனுடைய  நண்பர்கள் நான்கு வருடம் கஷ்டப்பட்டு வேலை பார்த்து, அனுபவத்தினை பெற்றுக் கொண்டு, எவ்வளவு சம்பளத்தினை பெற்றார்களோ அதைவிட இரண்டு மடங்கு அதிகம். எல்லாரும் ஆச்சரியப்பட்டுவிட்டார்கள். எப்படிடா இப்படி? என்று வாயடைத்து போய்விட்டார்கள். நாட்கள் செல்ல செல்ல இந்த மடங்கு அதிகமாகிக் கொண்டே சென்றது. இன்றைக்கும் அப்படிப்பட்ட மடங்கு மடங்காக பெருகும் ஆசீர்வாதத்தினை தருவேன் என்று நம்முடைய தேவன் வாக்களித்துள்ளார் நிச்சயமாகவே தருவார்.

  சரி இப்படி மடங்கு மடங்காக பெருகும் ஆசீர்வாதத்தினை எப்படி பெற்றுக்கொள்ள வேண்டும்? அதற்கு என்ன ஆவிக்குரிய தகுதி தேவை? நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும் ஆயிரமடங்கு அதிகமாகும்படி உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொல்லியபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக என்று வாக்குத்தத்தினை கொடுத்துள்ளாரே இது யாருக்கெல்லாம் கிடைக்கும்? ஆயிரம் மடங்கு ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள என்னென்ன செய்ய வேண்டும்? என்பதனை குறித்து தீர்க்கதரிசன செய்தியில் நாம் தியானிக்கலாம்.

  பரிசுத்த வேதத்தில் தானியேல், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ பத்து மடங்கு ஆசீர்வாதத்தினை பெற்றார்கள்.  அதே நேரத்தில் ஈசாக்கு நூறு மடங்கு ஆசீர்வாதத்தினை பெற்றான். பத்து மற்றும் நூறை பெருக்கும் போது ஆயிரம் கிடைக்கும்.  அவர்களுடைய  வாழ்க்கையில் எப்படி இந்த ஆசீர்வாதத்தினை பெற்றுக் கொண்டார்கள் என்பதனை  ஆராய்ச்சி செய்து, அதை அறிந்து கொண்டு, நாம் கடைபிடித்தால்  ஆயிரம் மடங்கு ஆசீர்வாதம் நமக்கு நிச்சயம் கிடைக்கும். இந்த செய்தியில்  அவர்கள் எப்படி ஆசீர்வாதத்தினை பெற்றுக் கொண்டார்கள் என்பதனை குறித்து ஆராய்ந்து பார்க்கலாம்.

தானியேல் 1:20

    ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்தில் ராஜா அவர்களைக் கேட்டு விசாரித்தானோ, அதிலே தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் அவர்களைப் பத்துமடங்கு சமர்த்தராகக் கண்டான்.

   தானியேல், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ  என்ற இந்த நான்கு வாலிபர்களுக்கும் பரலோக தேவன் சகல எழுத்திலும், ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார்.  இவர்கள் பாபிலோனில் உள்ள சகல ஞானவான்ககளைவிட பத்து மடங்கு சமர்த்தராக இருந்தார்கள்.  பத்து மடங்கு பரலோக தேவன் ஆசீர்வதித்தார். எப்படி இவர்களுக்கு இந்த ஆசீர்வாதம் கிடைத்தது? இவர்களுடனே கூட அனேக இஸ்ரவேல் வாலிபர்களும் இருந்த போது, இவர்களுக்கு மட்டும்  பத்து மடங்கு ஞானம்  எப்படி கிடைத்தது? இவர்கள் பரலோக தேவனுக்காக வைராக்கியம் காண்பித்தார்கள். இராஜாவின் போஜனத்தினால் தங்களை தீட்டுப்படுத்தாதபடி வைராக்கியமாக இருந்தார்கள். வைராக்கியத்தினை கிரியைகளில் காண்பித்தார்கள். அவர்களின் வைராக்கியத்தினை பார்த்த தேவன் அவர்களை பத்து மடங்கு ஆசீர்வதித்தார்.

   இந்த புதிய மாதத்திற்குள் வந்திருக்கும் தேவனுடைய பிள்ளைகளே! நீங்களும் ஆண்டவருக்காக வைராக்கியமாக இருங்கள். உங்கள் வைராக்கியத்தினை கிரியைகளில் காண்பியுங்கள்.  அதை பார்க்கின்ற தேவன் பத்து மடங்கு ஆசீர்வாததினை தந்து உங்களை ஆசீர்வதிப்பார். மடங்கு மடங்காக பெருகும் ஆசீர்வாதத்தினை பெற்றுக் கொள்வீர்கள்.

ஆதியாகமம் 26:12

ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்;

    ஆபிரகாமின் குமாரன் ஈசாக்கு நூறுமடங்கு ஆசீர்வாதத்தினை பெற்றான். எப்பொழுது அவனுக்கு இந்த ஆசீர்வாதம் கிடைத்தது?  பஞ்சக் காலத்தில் கிடைத்தது. அனேக மக்கள் பஞ்சத்தில் சிக்கியிருக்கு இவன் மட்டும் எப்படி ஆசீர்வதிக்கப்பட்டான்? ஆபிரகாமின் நாட்களில் இருந்ததைப் போல் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டாயிற்று.  அப்பொழுது ஈசாக்கு பஞ்சத்திலிருந்து தப்பிக்க எகிப்துக்கு போக வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தான்.  தேவன் அவனுக்கு தரிசனமாகி நான் உனக்குச் சொல்லும் தேசத்தில் குடியிரு என்று சொன்னார். கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அந்த தேசத்தில் குடியிருந்து விதை விதைத்தான்.  கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் நூறுமடங்கு பலன் அடைந்தான்.  ஆம் கர்த்தருடைய வார்த்தைக்கு அப்படியே கீழ்படியும்போது நூறுமடங்கு ஆசீர்வாதம் கிடைக்கும்.

  மடங்கு மடங்கான ஆசீர்வாதத்தினை பெரும்படி அழைக்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகளே பஞ்சம் என்று ஒன்று வாழ்க்கையில் வந்தவுடன். எகிப்துக்கு செல்ல வேண்டும் என்று நினையாமல், பரலோக தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியுங்கள். எகிப்துக்கு செல்லாமல் அவருடைய வார்த்தையின் சத்தத்தை கேளுங்கள்.  அவர் காண்பிக்கின்ற இடத்தில் விதை விதையுங்கள். அவர் காண்பிக்கின்ற தொழில் செய்யுங்கள். நூறு மடங்கு ஆசீர்வாதத்தின் பெற்றுக்கொள்வது நிச்சயம்.

   பரிசுத்த வேதத்தில் வைராக்கிய கிரியைகளை காண்பித்ததினால் தானியேல், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ  என்பவர்கள் பத்து மடங்கு ஆசீர்வாதத்தையும், கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்ததனால் ஈசாக்கு நூறு மடங்கு ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொண்டான். நாமும்  ஒருசேர வைராக்கியத்தினை  கிரியைகளில் காண்பிக்கும் போதும்,  கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படியும்போதும் ஆயிரம் மடங்கு ஆசீர்வாதத்தினை பெற்றுக்கொள்ளுவது நிச்சயம்.


(பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இந்தச் தீர்க்கதரிசன செய்தியும் ஆலோசனையும் உங்களுக்கு பிரயோஜனமாகவும் ஆசீர்வாதமாகவும் இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த ஊழியத்தினைப்பற்றி அறிந்துக்கொள்ளவும், ஜெபத்தேவைகள் மற்றும் ஜெப ஆலோசனைகளுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். https://www.pwmi.in/p/contact-us.html இதேபோல் தீர்க்கதரிசன செய்தியை பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த App- யை Install செய்து கொள்ளவும்.  https://play.google.com/store/apps/details?id=com.prophetic.words  மேலும் Prophetic Words என்ற Whats App , Youtube, மற்றும் Telegram, சேனல்களை (Channal) கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து  Subscribe செய்யுங்கள். 

Whats App Channel : CLICK HERE 

You Tube  : CLICK HERE

Telegram  CLICK HERE 

    மேலும் இந்த ஊழியத்தினைப்பற்றி அறிந்துக்கொள்ளவும், ஜெபத்தேவைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். CLICK HERE 

Comments

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..