திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்


                     

     ஒரு ஜெபக்குறிப்புக்காக ஜெபிக்கும்போது பல ஆசீர்வாதங்கள் தானாக கிடைத்தால் அதை திறவுக்கோல் ஜெபக்குறிப்பு என்று சொல்லுவார்கள். நெடு நாட்களாக ஏதாவது ஒரு ஆசீர்வாதத்திற்காக காத்துக் கொண்டிருந்து, எவ்வளவு ஜெபித்தும் அற்புதங்கள் நடக்கவில்லையென்றால்  திறவுக்கோல் ஜெபக்குறிப்புகளை கண்டறிந்து ஜெபித்தாலே போதும்,  வாழ்க்கையில்  அடைக்கப்பட்ட வாசல்கள் உடனே திறக்கப்படும். சரி திறவுக்கோல் ஜெபக்குறிப்பு என்றால் என்ன? அதை எப்படி கண்டறிந்து ஜெபிப்பது என்பதனை இந்த செய்தியில் விரிவாக தியானிக்கலாம்.

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எப்படி ஜெபிக்க வேண்டும் என்று தன்னுடைய சீஷர்களுக்கு கற்றுக்கொடுத்தார். அதேப்போல் அவரை மட்டும்  பின்பற்றுகின்ற உங்களுக்கும் எனக்கும் எப்படி ஜெபிக்க வேண்டும்? என்பதனை கற்றுக் கொடுக்கின்றவராகவே உள்ளார். பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென் என்பதே அந்த ஜெபமாகும். இதை பரிசுத்த வேதத்தில் மத்தேயு 6 ஆம் அதிகாரத்திலும், லூக்கா 11ஆம் அதிகாரத்திலும் வாசிக்கலாம். இந்த ஜெபத்தினை பரமண்டல ஜெபம் என்றும் கர்த்தருடைய ஜெபம் என்றும் சொல்லுவார்கள்.

    இந்த பரமண்டல ஜெபத்தை கொஞ்சம் விரிவாக ஆராய்ந்து தியானித்தால் நிறைய ஆவிக்குரிய இரகசியங்கள் உள்ளது நமக்கு தெரியும். இந்த ஜெபத்தில் ஏழு ஜெபக்குறிப்புகள் உள்ளன. அதில் நான்கு பரலோகத்திற்குரியதாகவும்,  மூன்று நமக்குரியதாகவும் உள்ளது. அந்த மூன்றில் இரண்டு ஆவிக்குரிய வாழ்க்கைக்குரியதாகவும், ஒன்று மட்டும் உலக வாழ்க்கைக்குரியதாகவும் உள்ளது. அது எது?  எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தினை இன்று எங்களுக்கு தாரும் என்பதே ஆகும். இந்த ஜெபக்குறிப்பு ஏழு ஜெபக்குறிப்புகளில் மையத்தில் உள்ளது.

    உலக வாழ்க்கையில் எவ்வளவோ தேவைகள் உள்ளன. திருமண வாழ்க்கை, சொந்த வீடு, கர்ப்பத்தின்கனி, கடன்பிரச்சனை, வேலைவாய்ப்பு, வருமானம் என்று எவ்வளவோ ஜெபக்குறிப்புகள் உள்ளன. அதையெல்லாம் விட்டுவிட்டு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சாப்பிடும் உணவிற்காக மாத்திரமே ஜெபிக்கக் கற்றுக்கொடுத்தார். அது ஏன்? கொஞ்சம் ஆழமாக பலமுறை தியானித்துப் பார்த்தால் அதில் மறைந்திருக்கின்ற இரகசியங்கள் நமக்கு புலப்படும்.

  நாம் சாப்பிடும் உணவு மிக முக்கியமான  ஒன்றாகும். ஆகாரம் சாப்பிடாமல் இந்த உலகத்தில் உயிர் வாழ முடியாது. எனவேதான் அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதிப்பேன் என்று நமக்கு வாக்குக்கொடுத்துள்ளார்.(யாத்திராகமும் 23:25) தினமும் நாம் சாப்பிடும் ஆகாரத்திற்கு மாத்திரமே ஜெபித்தால் போதும், மற்ற ஆசீர்வாதங்கள் தானாக நமக்கு கிடைத்துவிடும். இது வேதசத்தியம் ஆகும். அது எப்படி? என்பதாய் நீங்கள் கேட்கலாம்.

        தினமும் சாப்பிடும் உணவிற்காக ஜெபித்தால் கண்டிப்பாக ஜெபிக்கின்ற ஒவ்வொரு நாட்களும் நமக்கு நல்ல ஆகாரத்தினைக் கொடுப்பார். ஒருவேளை காகத்தினை கொண்டு போஷிக்கலாம் அல்லது வானத்திலிருந்து மன்னாவை பொழிய செய்தும் போஷிக்கலாம். சூழ்நிலைகளுக்கு தகுந்தாற்போல் நம்மை போஷிப்பார்.

      சரி தேவன் கொடுக்கும் உணவை சாப்பிட்டால் நமக்குள் என்ன நடக்கும்? உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் சரியாக சீராக இயங்க ஆரம்பித்துவிடும். உயிர் வாழ்வதற்கு சரீரத்தில் நல்ல பெலன் கிடைக்கும். சரி உயிர் வாழ்வதற்கு இந்த பூமியில் என்னென்ன தேவைகள் உள்ளன? உணவு சாப்பிட்டால் மட்டும் வாழமுடியுமா? இல்லை. முதலில் சரீரத்தைப் பாதுகாக்க நல்ல உடை, வீடு தேவை. வீட்டை பராமரிக்கவும், பாதுகாக்கவும் நல்லத் துணைத்தேவை. இவைகளையெல்லாம் பெற்றுக்கொள்ள நல்ல வருமானம் தேவை. சும்மா ஒன்றும் வருமானம் வராது வருமானங்களை தரும் தொழில் அல்லது வேலைத் தேவை. குடும்பம் என்று வந்துவிட்டால் குழந்தை பாக்கியம் தேவை. குழந்தைகளைப் பராமரிக்க கூடுதல் செலவுகள் ஏற்படும். அதை சரிச்செய்ய வேலை உயர்வு தேவை. இப்படி ஒன்று தொட்டு ஒன்று தொட்டு தேவைகள் இருக்கும். இது எல்லாம் உயிர் வாழ்வதற்கான தேவைகள் ஆகும். இவைகளெல்லாம் அந்த ஒரு  ஜெபக்குறிப்பினால் கிடைக்கும்.

     ஆகையால்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, இந்த உலக வாழ்க்கைக்காக நல்ல உணவிற்காக மாத்திரமே ஜெபிக்க கற்றுக்கொடுத்தார். எனவே, தினமும் நல்ல உணவிற்காக ஜெபியுங்கள். தினமும் போஷிக்கப்பட வேண்டும் என்று ஜெபிக்கும் போது மற்ற உலக ஆசீர்வாதங்கள் எல்லாம் தானாக கிடைத்து விடும்.

     ஆகாரத்திற்காக ஜெபிக்கும்போது மற்ற ஆசீர்வாதங்கள் தானாக கிடைக்கின்றன. இப்படி ஒன்றிற்காக ஜெபிக்கும்போது மற்றவைகள் தானாக கிடைப்பதும் அல்லது மற்றவைகளுக்காக  ஜெபித்தால்தான் இதைக் கொடுக்க முடியும் என்ற கட்டாயத்திற்குள் தள்ளப்படுவதுமான ஜெபக்குறிப்புகளை திறவுகோல் ஜெபக்குறிப்புகள் என்று சொல்லலாம். பல திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள் உள்ளன. அதை சரியாக அறிந்துக்கொண்டு ஜெபித்தாலே போதும்,  பல ஆசீர்வாதங்கள் தானாகவே கிடைக்கும். இந்த இரகசியத்தினை தேவனுடைய பிள்ளைகள் அறிந்து சரியான திறவுக்கோல் ஜெபக்குறிப்புகளை ஜெபிக்கப் பழக வேண்டும். அப்பொழுது பரலோக தேவன் பல வகையான ஆசீர்வாதங்களை நிச்சயமாக தருவார்.

     திறவுக்கோல் ஜெபக்குறிப்புகளை தீர்க்கதரிசன ஜெபக்குறிப்புகள் என்று சொல்லுவோம். எனவே எது திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள் என்று நமக்கு தெரியாது. பரிசுத்த ஆவியானவரே கற்றுக்கொடுக்க வேண்டும். விசுவாசிகளுக்கு விசுவாசிகள் இது வேறுபடும். ஊழியர்களுக்கு ஊழியர்கள் இது வித்தியாசப்படும். ஆகையால் ’பரிசுத்த ஆவியானவரே என்னுடைய சூழ்நிலைக்கான திறவுக்கோல் ஜெபக்குறிப்புகளை கற்றுத் தாரும்’  என்று கேட்க வேண்டும். பரிசுத்த ஆவியானவர் நிச்சயமாக கற்றுக்கொடுப்பார். அதற்காக ஜெபிக்கும்போது மற்ற ஆசீர்வாதங்கள் தானாய் கிடைக்கும்.

     என்னுடைய பெயர் T. வினோத் சாமுவேல். பரலோக தேவன் தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற இந்த ஊழியத்தினை கொடுத்துள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ஊழியத்தினை செய்து வருகின்றேன். இந்த ஊழியத்தின் மிக முக்கியமான தரிசனமே வேதத்தின் மிக ஆழமான இரகசியத்தினை தேவபிள்ளைகளுக்கு தெரியப்படுத்துவதும், அவர்களுக்கு  ஜெபித்து ஆலோசனைகளைக் கொடுப்பதும் ஆகும். அப்படி கடந்த நாட்களில் சில தேவனுடைய பிள்ளைகள் தொடர்புக் கொண்டு ஜெப ஆலோசனைகளை கேட்டார்கள். அவர்களுக்காக ஜெபித்து ஆலோசனைகளை  கொடுக்கும் போது, பரிசுத்த ஆவியானவர் சில திறவுக்கோல் ஜெபக்குறிப்புகளை கொடுத்தார். அதைக்குறித்து இதில் விளக்கி சொல்கின்றேன். நீங்களும் தொடர்ச்சியாக தியானியுங்கள். மாதிரி வினாத்தாள் என்று சொல்வார்களே அதேபோல்  இது ஒரு மாதிரி ஜெபக்குறிப்புகள்தான்.  அவர்களுடைய சூழ்நிலைகளுக்கு ஏற்ப பரிசுத்த ஆவியானவர் இதை கொடுத்தார். உங்கள் சூழ்நிலைக்கு இது மாறும். எனவே, இதை ஒரு மாதிரியாக எடுத்துக்கொண்டு தியானியுங்கள். நிச்சயம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.

      ஒரு சகோதரிக்கு நெடு நாட்களாகவே திருமணத் தடை இருந்தது. எவ்வளவோ தேடியும்  எவ்வளவோ வரன்கள் வந்தும், ஒன்று கூட  செட் ஆகவில்லை. வயது ஏறிக்கொண்டே செல்கின்றது  என்பது பெற்றோர்களின் கவலை. இந்த ஊழியத்தினை பற்றி அறிந்து என்னைத் தொடர்புக் கொண்டு ஜெபிக்குமாறு கேட்டார்கள். நான் அவர்களுக்காக ஜெபித்தேன். பரிசுத்த ஆவியானவர் சில ஆலோசனைகளைக் கொடுத்தார். அதாவது இனி திருமணத்திற்காக ஜெபிக்க வேண்டாம் என்றும் சந்ததி பெருக வேண்டும் என்றும்  நல்ல ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றும் ஜெபிக்க வேண்டும் என்றும் சில ஜெபக்குறிப்புகளை ஆலோசனையாக கொடுத்தார்.  இதில் சந்ததிப் பெருக வேண்டும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்பது திறவுக்கோல் ஜெபக்குறிப்பாகும். இதற்கு ஜெபிக்கும் போது முதலில் திருமணத் தடைகள் மாறி நல்ல திருமணம் நடைபெறும். பின்பு  சந்ததி பெருகும். எனவே, ஆவியானவர் அவர்களுக்கு இதை திறவுக்கோல் ஜெபக்குறிப்பாக ஆலோசனைகளைக் கொடுத்தார். அவர்களும் அவ்வாறே ஜெபித்தார்கள். என்ன ஆச்சரியம் திருமணத் தடை உடைக்கப்பட்டு, நல்ல வரன் கிடைத்தது. திருமணமும் நடந்தது. பல  வருடங்களாக திருமணத்தடை மாற வேண்டும் என்று ஜெபித்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. திருமணத்தடை மாறவில்லை. ஆனால், திறவுக்கோல் ஜெபக்குறிப்புகளை பெற்றுக்கொண்டு அதற்காக ஜெபித்தார்கள். உடனே அடைக்கப்பட்ட வழிகள் திறக்கப்பட்டன. அற்புதங்கள்  நடந்தன.

      இதை வாசிக்கின்ற தேவனுடைய பிள்ளைகளே! நீங்களும் நெடு நாட்களாக ஏதாவது ஒரு ஆசீர்வாதத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றீர்களா? எவ்வளவு ஜெபித்தும் அற்புதங்களை காணமுடியவில்லையா? முதலில் பரிசுத்த ஆவியானவரிடம் இருந்து  ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுங்கள். பின்பு அவர் தரும் ஜெபக்குறிப்புகளுக்காக ஜெபியுங்கள். அற்புதங்கள் தானாக நடக்கும்

     மற்றோர் சகோதரர் தொழிலை இழந்து, வருமானத்தையும் இழந்து, கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்தார். அவரும் என்னைத் தொடர்புக்கொண்டு வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜெபிக்கச் சொன்னார். நான் அவர்களுக்காக ஜெபித்தேன். புதிதாக வீடு கட்ட வேண்டும் என்ற ஜெபக்குறிப்புக்களுக்காக ஜெபிக்க சொல்லி பரிசுத்த ஆவியானவர் ஆலோசனைக்களைக் கொடுத்தார். ஆவியானவர் இப்படியெல்லாம் ஜெபிக்க சொல்லுவாரா என்று சிலர் யோசிப்பார்கள். பரிசுத்த ஆவியானவருக்கு எல்லையே கிடையாது. ஒவ்வொருவரின் சூழ்நிலைகளையும், ஆவிக்குரிய நிலைமைகளை அறிந்தும் ஏற்ற ஜெபக்குறிப்புகளை கொடுப்பார். அந்த சகோதரருக்கு புதிதாக வீடு கட்ட வேண்டும் என்பதற்காக ஜெபிக்க சொன்னார். அவரும் கீழ்படிந்து விடாமல் தொடர்ச்சியாக ஜெபித்தார்.  ஜெபத்தைக் கேட்ட பரலோக தேவன் நல்ல வருமானத்தினைக் கொடுத்தார். முதலில் கடனை அடைத்தார். பின்பு, வந்த வருமானத்தினைக் கொண்டு, நல்ல வீட்டைக் கட்டினார். பரலோக தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். தேவனுடைய நாமம் மகிமைப்பட்டது.

      இதில் ஒரு ஆவிக்குரிய இரகசியம் அடங்கியிருக்கின்றது. அந்த சகோதரர் தன்னுடைய மதியீனத்தினால் தொழிலை இழந்து, வருமானத்தை இழந்து, கடன் பிரச்சனையில் சிக்கினார். அவரும் கடனை அடைக்கக்கூடாதபடிக்கு பிசாசும் பயங்கரமாகப் போராடினான். கடனை அடைப்பதற்காகவும், வருமானத்திற்காகவும் ஜெபிக்கும்போது அந்த ஜெபத்தை பரலோக தேவன் கேட்ககூடாதப்படிக்கு தடுத்தான். எனவே, அந்த சகோதரனுக்கு பதில் கிடைக்கவில்லை. அற்புதமும் நடக்கவில்லை.  

    ஆனால், இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் சொல்லி வீடு கட்ட வேண்டும் என்று ஜெபித்ததால் அந்த ஜெபத்தை பிசாசு தடுக்க முடியவில்லை. எனவே, பரலோகதேவன் அதைக் கேட்டு வீடு கட்டுவதற்கு தேவையான வருமானத்தினை முதலில் கொடுத்தார். அதற்காக தொழிலை ஆசீர்வதித்தார். யாராவது கடன் பிரச்சனையில் இருக்கும்போது வீட்டை கட்ட மாட்டார்கள். எனவே, வருமானம் வர வர முதலில் கடனை அடைத்தார்கள். மீண்டும் வர வர அதைக் கொண்டு வீட்டை கட்டினார்கள். தேவனுடைய நாமம் மகிமைப்பட்டது. எல்லாருக்கும் முன்பாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் உயர்த்தப்பட்டது.

      இதை வாசிக்கும் தேவனுடைய பிள்ளைகளே! சில நேரங்களில் உங்கள் மதியீனத்தினால் ஜெபங்கள் கேட்க கூடாதப்படிக்கு பிசாசின் போராட்டங்கள் இருக்கும். எவ்வளவு ஜெபித்தும் உங்கள் ஜெபம் கேட்கப்பட்டிருக்காது. திறவுக்கோல் ஜெபக்குறிப்புகளை கண்டறிந்து அதற்காக ஜெபியுங்கள். நிச்சயமாகவே உங்கள் வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்கும்.

இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.

 பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும். மேலும் இந்த ஊழியத்தினைப்பற்றி அறிந்துக்கொள்ளவும், ஜெபத்தேவைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். CLICK HERE 

Comments

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..