என்றும் இளமை, என்றென்றும் இளமை


        

  சகல துதி, கனம், மகிமை, புகழ்ச்சி, கீர்த்தி, பெருமை எல்லாவற்றையும் பரலோக பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கும் உண்டாகட்டும். என்றும் இளமை என்றென்றும் இளமை  என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை வாசிக்க லிங்கை கிளிக் செய்து வாஞ்சையாய் வந்த உங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக எங்களுடைய அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயம் சர்வவல்ல தேவன் உங்களை எண்ணாகமம் 23:22 ம் வசனத்தின் படி  ஆசீர்வதித்து உயர்த்துவாராக.   

   இந்த செய்தியின் தலைப்பை பார்க்கும் போது ஏதோ சினிமா படத்தின் பெயர் போல தோன்றும். ஆனால், உண்மையிலே இது சினிமா படத்தின் பெயரா? இல்லையா? என்பது எனக்கு இதுவரைக்கும் தெரியாது. ஏனென்றால், சினிமா படம் பார்த்தே பல வருடங்கள் ஆகிவிட்டது. இரட்சிக்கப்படுவதற்கு முன்பாகதான் சினிமா பார்த்தேன். ஆதலால் எனக்கு தெரியவில்லை. ஒருவேளை சினிமா படத்தின் பெயராக இருக்குமோ என்ற  சந்தேகம் எனக்குள் இருந்தது. என் உடன் ஊழியர்களிடம் கேட்டேன். இல்லை என்று சொன்னார்கள். உடனே அதை இந்த செய்தியின் பெயராக வைத்துவிட்டேன். ஒருவேளை உங்களுக்கு தெரிந்திருந்தால், மறக்காமல் எனக்கு தெரியப்படுத்துங்கள். தலைப்பை மாற்றுவதை பற்றி யோசிக்கின்றேன். தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்.

 என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்பது உலக  மனிதர்களின் ஆசையாக இருக்கும். ஆனால், நாட்கள் செல்ல செல்ல வயது கடக்க கடக்க வாலிபம் மறைந்து வயோதிபம் வந்து விடுகின்றது. இதை யாராலும் தடுக்க முடியாது. குழந்தைகள், வாலிபர்கள், வயதானவர்கள் என பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கையை பரிசுத்த வேதத்தில் பார்க்கலாம். அதில், வயது சென்றும் வாலிபர்களாக வாழ்ந்தவர்களும் உண்டு. குறைந்த வயதில் பெலன் குறைந்து, கிழவனானவர்களும் உண்டு. வயது சென்றாலும் வாலிபர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஆசை இருந்தால், முதலில் எது வயோதிபம்? எது வாலிபம்? என்பதனை மிக நன்றாக தெரிந்திருக்க வேண்டும். இந்த தீர்க்கதரிசன செய்தியில் பரிசுத்த வேதத்தின்படி வயோதிபம் என்றால் என்ன? எது வாலிபம்? என்றும் இளமையாகவும் என்றென்றும் இளமையாகவும் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்பதனை குறித்து விரிவாக தியானிக்கலாம். ஜெபத்துடன் வாசியுங்கள்.

  ஏலி என்ற ஒரு ஆசாரியரைக் குறித்து சாமுவேல் புஸ்த்தகத்தில் வாசிக்கலாம். இவன் தொன்னூற்றெட்டு வயதில் (98) கண்கள் பார்வை  இழந்து, பெலன் குறைந்து, மிகுந்த கிழவனாக மாறி, ஆசனத்தில் இருந்து, மல்லாக்க விழுந்து, பிடரி முறிந்து செத்துப்போனான் என்று வேதம் கூறுகின்றது. (1 சாமுவேல் 4)பரிசுத்த வேதத்தில் வாழ்ந்த மிகுந்த கிழவன்களில் இவனும் ஒருவன். ஆனால், தேவனுடைய தாசனாகிய மோசே என்ற தீர்க்கதரிசியைப் பாருங்கள். நூற்றிருபது(120) வயதில் மரித்தான். அவன் வியாதிப்பட்டு மரிக்கவில்லை. அவன் கண்கள் இருளடையவில்லை. அவன் பெலன் குறையவில்லை. வாலிபனாக மரித்தான். அது மாத்திரமல்ல, பரிசுத்த வேதத்தில் எங்கேயும் கிழவன் என்றும், வயதானவன் என்றும் அவனைப்பற்றி கூறப்படவில்லை.(உபாகமம் 34:7)

 தொன்னூற்றெட்டு (98) வயதில் மரித்த ஏலி பெலன் குறைந்து, மிகுந்த கிழவனாக இருந்தான். ஆனால், நூற்றிருபது(120)  வயதில் மரித்த மோசேயோ பெலன் குறையாமல் வாலிபனாக இருந்தான்.  இந்த இரண்டு பேர்களின் வாழ்க்கையும் ஒப்பிட்டு பார்க்கும்போது, வயதைக் கொண்டு வாலிபன் என்றும் கிழவன் என்றும் யாரையும் சொல்ல முடியாது என்பதும், மாறாக உடலின் பெலனையும், கண்களின் பார்வையையும் கொண்டே வயதானவர்களா அல்லது வாலிபர்களா என்று தீர்க்க முடியும் என்பது புலப்படும். அதாவது வயது சென்றாலும் பெலன் குறையாமல், அதிக பெலனோடு இருந்தால் அவர்களை வாலிபர்கள் என்றும், குறைந்த வயதில் பெலன் குன்றி இருந்தால் அவர்களைக் கிழவன் என்றும் அழைக்கலாம். பரிசுத்த வேதத்தின் படி வயோதிபம் மற்றும் வாலிபம் என்பது வயதை பொறுத்ததல்ல… சரீர பெலனை பொறுத்தே கணக்கிடப்படுகின்றது. எனவேதான் குறைந்த வயதில் பெலன் குறைந்து இருந்தால் அவர்களை கிழவன் என்று அழைக்கின்றார்கள்.

  நம்மில் அநேகருக்கு வாலிபர்களாக இருக்க வேண்டும் என்ற விருப்பமும் ஆசையும் இருக்கும். அதற்காக பிரயாசப்படுகின்றவர்கள் உண்டு. வயதை மறைக்க தலைமுடிக்கு சாயம் பூசுபவர்களும் உண்டு. இதை அன்றாடம் நம்முடைய சமூகத்தில் பார்க்கலாம். இந்தச் செய்தியை வாசிக்கின்ற நீங்களும் என்றும் இளமையாகவும் என்றென்றும் இளமையாகவும் இருக்க ஆசைப்பட்டால், சரீரத்தின் பெலன் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கண்களில் பார்வையையும் குறைய விடக்கூடாது. அப்படியிருந்தால், மோசையைப் போல் கிழவனாக மாறாமல் வாலிபனாகவே என்றும் இளமையாக இருக்கலாம். குறிப்பிட்ட வருடங்கள் மட்டுமல்ல… வாழ்நாட்கள் முழுதும் வாலிபம் இருக்கும்.

  இப்பொழுது, உங்களுக்குள் எப்படி என் பெலன் குறையாமல் பார்த்துக் கொள்ள முடியும் என்ற கேள்வி எழும்பும்.  தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டுமா? அல்லது விலை அதிகம் கொடுத்து சத்தான உணவை வாங்கி சாப்பிட வேண்டுமா? என்பதாய் யோசிக்கலாம். சத்தான உணவினை சாப்பிடுவதாலோ அல்லது உடற்பயிற்சி செய்வதாலோ உங்கள் பெலன் குறையாமல் பாதுகாக்க முடியாது. நிச்சயமாக முடியாது. அப்படியென்றால் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்கலாம். அதற்கான பதிலை அறிந்துக்கொள்ள பரிசுத்த வேதத்திலிருந்து சில இரகசியங்களை தியானிப்போம்.

       எப்புன்னேயின் குமாரன் காலேப் என்ற ஒருவனைக் குறித்து பரிசுத்த வேதத்தில் பார்க்கலாம்.  அவன் தன் வாயினால் சொல்லும் அறிக்கையை கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். இப்போதும், ”இதோ, கர்த்தர் சொன்னப்படியே என்னை உயிரோடே காத்தார்; இஸ்ரவேலர் வனாந்திரத்தில் சஞ்சரிக்கையில், கர்த்தர் அந்த வார்த்தையை மோசேயோடு சொல்லி இப்போது நாற்பத்தைந்து வருஷமாயிற்று; இதோ, இன்று நான் எண்பத்தைந்து வயதுள்ளவன். மோசே என்னை அனுப்புகின்ற அந்த நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கின்றது; யுத்தத்திற்கு போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு  அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கின்றது” என்று சொல்கின்றான்.(யோசுவா 14) அதாவது நாற்பது (40) வயதில் அவனுக்கு இருந்த பெலன் கொஞ்சம் கூட குறையாமல் எண்பத்தைந்து (85) வயதிலும் அப்படியே இருந்தது. சரீர பெலன் குறையாமல் இளமையாகவே இருந்தான். அவன் பெலன் குறையாமல் இருக்க என்ன காரணம்? ஏன் அவன் பெலன் குறையவில்லை? என்று ஆராய்ந்துப் பார்த்தால், உத்தமமாக கர்த்தரை பின்பற்றினான் என்பது தெரியவரும். அவனிடம் தேவனைப் பற்றிய உத்தமம் காணப்பட்டது. உத்தமமாக இருந்தா.  எனவே, வனாந்தரத்தில் பரலோக தேவன் அவனைப் பாதுகாத்தார். அவன் பெலன் குறையாமல் இருந்தது.

 உத்தமமாகவும் உண்மையாகவும் பரலோக தேவனைப் பின்பற்றினால் நமது பெலன் குறையாமல் இருக்கும்.  நூறு வயதிலும் நாற்பது வயதுக்கேற்ற பெலன் ஆரோக்கியம் இருக்கும். ஆதலால் உத்தமமாக தேவனை பின்பற்றுவோம். சரீரத்தில் பெலன் குறையாமல் பாதுகாப்போம்.

 சரி! பிரதர் நீங்கள் சொல்லுகிறதை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.  உத்தமம் என்றால் என்ன? எப்படி உத்தமமாக வாழ்வது? எனக்கு  கொஞ்சம் தெளிவாக விளக்கி சொல்லுங்கள் என்பதாய் நீங்கள் கேட்கலாம்.  கண்டிப்பாக நான் உங்களுக்குத் சொல்லித் தருகின்றேன். அதற்கு முன்பாக என்னைப் பற்றியும், இந்த ஊழியத்தினை பற்றியும் கொஞ்சம் தெரிந்துக் கொள்ளுங்கள். என்னுடைய பெயர் T. வினோத் சாமுவேல் நான் தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற ஊழியத்தினை தென்காசி மாவட்டத்திலிருந்து செய்து வருகின்றேன். வேதாகமம் எழுதும் தேர்வினை நடத்துவதும்,  பாவ, சாப, பில்லி சூனியக் கட்டுகளை உடைப்பதும்,  தீர்க்கதரிசன ஆலோசனைகளை கொடுப்பதும், தீர்க்கதரிசன வெளிப்பாடுகளை சொல்லி ஜெபிப்பதும் போன்ற  பலவிதமான ஊழியங்களை செய்ய பரலோகதேவன் கிருபை கொடுத்துள்ளார். அவருக்கே மகிமை உண்டாகடும்.  அதில் ஒன்றுதான் பரிசுத்த வேதத்தின் மிக ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக தேவமக்களுக்கு அறிவிப்பது ஆகும். இதற்கு முன்பாகவும் பல தீர்க்கதரிசன செய்திகள் வந்துள்ளன.  அதைப் பற்றி தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். Click Here இன்னும் பல செய்திகள் உள்ளன. அவற்றை வாசிக்க இந்த ஊழியத்துடன் இணைந்து இருங்கள்.  பரலோகதேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

 சரி..! உத்தமம் என்றால் என்ன என்பதனைக் குறித்து தொடர்ந்து தியானிக்கலாம். ஆபிரகாமுக்கு தொன்னூற்றொன்பது (99) வயதாக இருக்கும்போது, பரலோக தேவன் அவனுக்கு தரிசனமாகி: நான் சர்வ வல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாக இரு என்று கூறினார். (ஆதியாகமம் 17:1) ஏன் அவ்வாறு கூற வேண்டும்? ஏனென்றால், ஆபிரகாம் தேவனுக்கு முன்பாக உத்தமனாக இருக்கவில்லை. நல்ல ஒரு குழந்தையை தருவேன் என்று வாக்குக் கொடுத்திருந்தார்.  ஆனால்,  அவன் தன் மனைவி பேச்சைக் கேட்டு, குழந்தை பாக்கியத்தின் மீது இருந்த ஆசையினால், அடிமைப் பெண்ணாகிய ஆகாரை சேர்ந்து, தேவசித்தம் இல்லாத இஸ்மவேலை பெற்றெடுத்துவிட்டான். (ஆதியாகமம் 16) ஆதலால் தேவன் அவனோடு பதின்மூன்று (13) வருடங்கள் பேசவில்லை.  இது அவனுடைய வாழ்க்கையில் இருண்ட காலமாகும்.  அதன்பின்பு தான் தரிசனமாகி உத்தமனாக இரு என்றும் நான் சர்வ வல்லமையுள்ள தேவன் என்றும் கூறினார்.

 அதாவது, எக்காரணம் கொண்டும் யாருக்காகவும் எதற்காகவும், தேவனுடைய வார்த்தையை மறுதலித்து மனிதர்களுக்கு கீழ்ப்படியக்கூடாது. தேவனைவிட மனிதர்களை அதிகமாக நேசிக்கக்கூடாது. தேவனா? அல்லது மனிதனா? என்று வரும்போது தேவனுக்கே முதலிடம் கொடுக்க வேண்டும். இதுதான் உத்தமமாகும். முதலில் ஆபிரகாம் இப்படி உத்தமனாக இருக்கவில்லை. எனவே, எனக்கு முன்பாக உத்தமனாக இரு என்று கூறினார்.

 எப்புன்னேயின் குமாரனாகிய காலேப்பின் வாழ்க்கையை ஆராய்ந்து பாருங்கள். அவன் உத்தமனாய் என்னை பின்பற்றினான் என்று தேவனே சாட்சிக் கொடுத்தார். (எண்ணாகமம் 14:24) அவனுடைய உத்தமம் எப்படிப்பட்டது? அவன் என்ன செய்தான்?

  கானான் தேசத்தினை சுற்றிப்பார்ப்பதற்காக ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும்  பிரபுவாகிய மனிதனை அனுப்ப வேண்டும் என்று மோசேயோடு கர்த்தர் பேசினார். அந்த வாக்கின்படி பன்னிரெண்டு பேரை மோசே அனுப்பினான். அதில் ஒருவன்தான் இந்த காலேப். இவர்கள் தேசத்தினை வேவுப் பார்க்கச் சென்றார்கள். தேசத்தினை சுற்றிப் பார்த்துவிட்டு நாற்பது நாள் கழித்து திரும்பினார்கள். அப்பொழுது அந்த தேசத்தினை குறித்த துர்ச்செய்திகளைப் பரப்பினார்கள். குடிகளை பட்சிக்கும் தேசம் என்று சொல்லியும், இராட்சதர்கள் இருக்கின்றார்கள் என்று சொல்லியும், இஸ்ரவேல் மக்களின் இதயத்தினை கரைந்துப் போக பண்ணினார்கள். ஆனால், இந்த காலேபும் நூனின் குமாரனாகிய யோசுவாவும் தங்கள் வஸ்திரங்களை கிழித்துக்கொண்டு, இஸ்ரவேல் மக்களின் சமஸ்த சபையை நோக்கி, நாங்கள் சுற்றிப் பார்த்து வந்த தேசம் மிக நல்ல தேசம். கர்த்தர் அதை நமக்கு கொடுப்பார் என்றும், அந்த மக்களுக்கு பயப்படாதீர்கள் என்றும், அவர்கள் நமக்கு இரையாவார்கள் என்றும் விசுவாச வார்த்தைகளை பேசினார்கள்.(எண்ணாகமம் 13,14)

 வேவுப்பார்க்க சென்றவர்களில் பத்து பேர் ஒரு பக்கமும், இரண்டு பேர் மற்றோர் பக்கமும் இருந்தார்கள். இஸ்ரவேல் மக்கள் மெஜாரிட்டி எந்த பக்கமோ அந்த பக்கம் ஒன்று சேர்ந்து, தேவனுக்கு விரோதமாக கலகம் செய்தார்கள். ஆனால், இவர்கள் மெஜாரிட்டியை பார்க்கவில்லை. தேவனுடைய வார்த்தையைப் பார்த்து தேவனையே சார்ந்து நின்றார்கள். எனவேதான், தேவன் காலேப்பைப் பார்த்து என்னை உத்தமமாய் பின்பற்றினான் என்று சாட்சிக்கொடுத்தார். அவன் உத்தமனாக வாழ்ந்ததினால் எண்பத்தைந்து (85) வயதிலும் அவன் பெலன் குறையவில்லை.

 பெலன் குறையாமல் இருக்க முதிர்வயதிலும் வாலிபர்களைப்போல் பெலன் உள்ளவர்களாக இருக்க உத்தமமாக வாழ வேண்டும். உத்தமனாக வாழ்ந்தால் என்றும் இளமையாக இருப்போம். எனவே, தேவனுடைய பிள்ளைகளே உத்தமமாக வாழ இன்றே தீர்மானம் செய்யுங்கள். நிச்சயம் பரலோக தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். உங்கள் பெலன் குறையாமல் என்றும் இளைமையாகவும் என்றென்றும் இளமையாகவும் இருப்பீர்கள். ஆமென்.

 

இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.

 (பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)

இதுவரை தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக அனுப்பப்பட்டுள்ள தீர்க்கதரிசன செய்திகளை வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். Click Here 

தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here  

தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும்  எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில்  E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள      E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும்  கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். ClickHere 

தீர்க்கதரிசன தியானங்களை  You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here 

தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல்  பெற இதை கிளிக் செய்யுங்கள்.  Click Here 

Comments

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..