தேவனுடைய விருப்பம் எது?
ஜனங்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து எகிப்துக்குத் திரும்புவார்கள் என்று
சொல்லி; பெலிஸ்தரின் தேச வழியாய் போவது சமீபமானாலும், தேவன் அவர்களை அந்த வழியில் நடத்தாமல்,
சிவந்த சமுத்திரத்தின் வனாந்தர வழியாய் ஜனங்களை சுற்றிப் போகப்பண்ணினார். இஸ்ரவேல்
புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து அணியணியாய் புறப்பட்டார்கள். இந்த வசனத்தை பரிசுத்த
வேதத்தில் யாத்திராகமம் புத்தகம் 13 ஆம் அதிகாரம் 17 மற்றும் 18 ஆம் வசனங்களில் வாசிக்கலாம்.
இஸ்ரவேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தனத்தின் நுகத்தடியிலிருந்து விடுதலையாகி கானானுக்கு
நேராகச் சென்றார்கள். தேவனுடைய மனிதனாகிய மோசே அவர்களை வழிநடத்தினான். அப்பொழுதுதான்
பரலோக தேவன் ஜனங்கள் யுத்தத்தினை கண்டால் மனமடிந்து
விடுவார்கள் என்று சொல்லி அவர்களை வேறு வழியாக நடத்தினார். அதைத்தான் இந்த வசனத்தில்
வாசித்தோம். இதை கொஞ்சம் ஆழமாக தியானித்தால் பல ஆவிக்குரிய இரகசியங்கள் வெளிப்படும்.
தீர்க்கதரிசன வார்த்தைகளும் நமக்கு நேராக கடந்து வரும். இந்தச் செய்தியில் இந்த வசனங்களை
பல வழிகளில், பல தலைப்புகளில் தியானிக்கலாம்.
யுத்தங்கள் ஏன்?'
எகிப்திலிருந்து வரும் ஜனங்கள் பெலிஸ்தரின்
தேசத்தின் வழியாக சென்றால் சீக்கிரமாக கானானுக்குள் சென்றுவிடலாம். ஆனால், நாம் கானானுக்குள்
செல்வதை பெலிஸ்தியன் கண்டிப்பாக எதிர்ப்பான். அது மாத்திரமல்ல யுத்தம் செய்வான். ஆவிக்குரிய
வாழ்க்கையிலும் பரம கானானுக்கு நாம் ஆயத்தமாவதை
பிசாசு விரும்ப மாட்டான். யுத்தம் செய்தாவது அதை தடுக்க முயற்சி செய்வான். இதனால்தான்
நம் வாழ்க்கையில் யுத்தங்கள் போராட்டங்கள் வருகின்றன.
இது தெரியாமல் அநேக தேவனுடைய பிள்ளைகள் சோர்ந்து போகின்றார்கள். ஏன் இந்த பிரச்சனை?
ஏன் இந்த பாடுகள்? ஏன் இந்த சோர்வுகள்? என்று கலங்கி போகின்றார்கள். நம்முடைய பிரயாணம் கானானை நோக்கி என்றால் கண்டிப்பாக
யுத்தம் வரும். அந்த யுத்தத்தினை கண்டு சோர்ந்து போகாமல் இருப்பது மிகவும் நன்றாக இருக்கும்.
மனமடிவுக்கான காரணம் என்ன?
எகிப்திலிருந்து விடுதலையாகி வரும் இஸ்ரவேல் மக்கள் யுத்தத்தினைக் கண்டால் மனமடிவார்கள்
என்று வேத வசனம் கூறுகின்றது. மனமடிவு என்பது மிக மோசமான ஒன்றாகும். அடிமைத்தனத்திலிருந்து
விடுதலையாகி வரும் ஜனங்கள் இளைப்பாறுதலையும் சமாதானத்தையும் எதிர்பார்த்திருப்பார்கள்.
அந்நேரத்தில் யுத்தத்தினை கண்டால் அவர்களுக்குள் மனமடிவு ஏற்பட்டுவிடும். எதிர்பார்த்தது
நடக்கவில்லை என்றால் மனமடிவு ஏற்படுகின்றது.
ஆவிக்குரிய வாழ்க்கையிலும் பாவம், வியாதியின் அடிமைத்தனத்திலிருந்து இரட்சிக்கப்படும் மக்கள் இனி பிரச்சனையே இல்லை என்று நினைக்கின்றார்கள். ஆனால், அவர்கள் நினைப்பது போல் இருப்பதில்லை. கஷ்டங்கள், பாடுகள், சோர்வு எல்லாம் இருக்கின்றன. இதைப் பார்க்கும்போது அவர்களுக்குள் ஒரு விதமான மனமடிவு ஏற்படுகின்றது. இதனால் வாழ்நாள் முழுவதும் ஒரு விதமான மன அழுத்தத்தில் தான் வாழ்க்கையை வாழ்கின்றார்கள். கிறிஸ்தவ வாழ்க்கையில் பாடுகளும், உபத்திரவங்களும் பிரிக்க முடியாத ஒன்று என்பதனை புரிந்து கொண்டால் இவ்வகையான மனமடிவு வராமல் நம்மை பாதுகாக்கலாம்.
பின் மாற்றத்திற்குள் யார் செல்வார்கள்?
எகிப்திலிருந்து கானானை நோக்கி வரும் இஸ்ரவேல் மக்கள் யுத்தத்தினை கண்டால் மனமடிந்து
எகிப்துக்கு திரும்புவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. எகிப்து என்பது பாவமாகும். பாவத்திலிருந்து
விடுதலையாகி வரும் மக்கள் ஏதாவது ஒரு யுத்தத்தினை பார்த்தாலே போதும் சோர்ந்து போய்
மனமடிவுக்குள்ளாகி மறுபடியும் பாவத்திற்குள்ளாக சென்று விடுவார்கள்.
ஆவிக்குரிய வாழ்க்கையில் முன்னேறி செல்லும் போது பிசாசின் தாக்குதல்கள் வரும்.
ஆவிக்குரிய யுத்தங்கள் காணப்படும். இதைக்கண்டு மனமடிவுக்குள்ளாக கூடாது. அப்படி மனமடிவு
வந்தாலும் எகிப்துக்கு செல்ல வேண்டும் என்று, அதாவது பழைய பாவத்திற்குள் செல்ல வேண்டும்
என்று தோன்றும். அதற்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்கக் கூடாது. மீறினால் பின் மாற்றத்திற்குள்
சென்று விடுவோம். பின்மாற்றக்காரர்களாக மாறிவிடுவோம்.
கானானுக்குள் சீக்கிரம் செல்ல:-
கானானை நோக்கி செல்லும் தேவனுடைய ஜனங்கள் பெலிஸ்தரின் தேச வழியாய் சென்றால்
சீக்கிரம் சென்றுவிடலாம். ஏனென்றால், கானான் சமீபமே. ஆனால், பெலிஸ்தரின் தேசத்திற்குள்
சென்றால் யுத்தம் நடக்கும். யுத்தத்தினை பார்க்கும்போது மனமடிவு ஏற்படும். எகிப்துக்கு
சென்று விடலாம் என்றும் கூட தோன்றும். ஆனால், அதற்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்காமல்
பெலிஸ்தரின் யுத்தத்தினை கண்டு பயப்படாமல் இருக்கும்போது சீக்கிரம் கானானுக்குள் சென்று
விடலாம்.
ஆவிக்குரிய வாழ்க்கையிலும் அனேகர் சீக்கிரமாக ஆசீர்வாதத்தினை சுதந்தரிக்க வேண்டும்,
வாக்குத்தத்தினை சுதந்தரிக்க வேண்டும் என்று விரும்புகின்றார்கள். இது நல்லது தான்
பாவம் கிடையாது. எல்லாருக்கும் இந்த விருப்பம் ஆசை இருக்கும். சீக்கிரமாக எல்லாம் கிடைக்க
வேண்டும் என்றால் பெலிஸ்தனோடு யுத்தம் செய்ய வேண்டும். பெலிஸ்தன் என்பவன்
பிசாசுக்கு அடையாளமானவன். பிசாசோடு யுத்தம் செய்ய வேண்டும். யுத்தம் செய்யும்போது
மனமடிவு வரும். சோர்வு வரும். ஆனால், அதற்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்கக் கூடாது அப்படி
யுத்தம் செய்யும்போது சீக்கிரம் ஆசீர்வாதத்தினை பெற்றுக்கொள்ளலாம்.
வனாந்தர வழியில் நடத்தப்படுதல்:-
கானானை நோக்கி செல்லும் தேவ ஜனங்களை சிவந்த சமுத்திரத்தின் வனாந்தர வழியில்
பரலோக தேவன் சுற்றி போகப் பண்ணினார். ஏன் அவர்களை வனாந்தர பாதையில் நடத்தினார். கொஞ்சம்
ஆராய்ந்தால் சில சத்தியங்கள் நமக்கு தெரியும்.
பெலிஸ்தரின் தேசத்தின் வழியாக சென்றால் சீக்கிரம் சென்றுவிடலாம். ஆனால், யுத்தங்கள்
வரும். இந்த யுத்தத்தினை பார்த்து மனமடிவுண்டாகி திரும்ப எகிப்துக்கு செல்ல நேரிடும்.
அப்படி தேவனுடைய பிள்ளைகள் சென்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான் வனாந்திர வழியாக நடத்துகின்றார். பரலோக
தேவன் வனாந்தரம் இல்லாத பாதையில் நம்மை நடத்த முடியும். ஆனால், அதில் வரும் யுத்தத்தினையும்
மேற்கொள்ள தெரிந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் எளிமையான இலகுவான பாதையில் நம்மை
நடத்துவார். மாறாக யுத்தங்களை கண்டு மனமடிவானால் வனாந்தரத்தின் பாதை வழியாகத்தான் செல்ல
நேரிடும்.
தேவனுடைய விருப்பம் எது?
தேவனுடைய பிள்ளைகளை கானானுக்குள் சீக்கிரம் கூட்டிக் கொண்டு செல்வதா? அல்லது
வனாந்தரத்தினை சுற்றி போகப் பண்ணுவதா? இதில் எது அவருடைய விருப்பம் என்று நமக்குள்
சந்தேகக் கேள்வி எழும்பும். இந்த இரண்டை விட மனமடிவாகி மறுபடியும் எகிப்துக்கு செல்லக்கூடாது
என்பதே அவருடைய விருப்பமாக உள்ளது. எனவே, தேவனுடைய பிள்ளைகளின் ஆவிக்குரிய நிலைகளை
வைத்தே அவர்களை வழிநடத்துவது அவருக்கு பிரியம் என்பது விளங்கும்.
யுத்தத்தினை
கண்டாலும் மனமடிவுக்கு இடம் கொடுத்து பின்வாங்க
மாட்டேன் என்று வைராக்கியமாக இருப்பவர்களை சீக்கிரத்தில் ஆசீர்வாதங்களை சுதந்தரிக்க
செய்கின்றார். இல்லை மனமடிவாகி பின்வாங்கி விடுவேன் என்றிருப்பவர்களை வனாந்தரத்தினை
சுற்றி போகப் பண்ணுகின்றார். ஆதலால் ஆசீர்வாதத்தினை சுதந்தரிப்பது நம் கையில் தான்
உள்ளது.
இந்தச் செய்தி
உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன்,
பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள்
ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.
(பிதா, குமாரன், பரிசுத்த
ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப
தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு
ஆசீர்வாதமாக இருக்கும்.)
இதுவரை தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக அனுப்பப்பட்டுள்ள தீர்க்கதரிசன செய்திகளை வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். Click Here
தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல் பெற இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Comments
Post a Comment