ஒரு நன்மையும் குறைவுபடாது
கர்த்தரை தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடாது என்று சங்கீதம் 34:10 ல் வாசிக்கின்றோம். இதையே இந்த நாட்களில் சர்வ வல்ல தேவன் வாக்குத்தத்தமாக கொடுத்துள்ளார். இதை வாசிக்கின்றபோது உங்களுக்கு ஒரு நகைச்சுவையாக இருக்கலாம். என்ன சார் சொல்றீங்க எங்க இருக்கீங்கா இந்த உலகத்தில்தானா கொள்ளை நோயினால் உலகமே ஸ்தம்பித்து இருக்கிறது. தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள், அரசு துறைகள் ஏன் சாதாரண ரோட்டோர கடைகள் எல்லாமே மூடியாச்சு. வேலை இல்லை அதனால் வருமானத்திற்கு வழியும் இல்லை. இப்பொழுது இந்த வசனத்தை சொல்றீங்களே என்று யோசிக்கலாம். இப்படி யோசித்தால் உங்களுக்கு தேவனுடைய வல்லமை தெரியவில்லை என்று அர்த்தம். அவருடைய வல்லமை மிகவும் வித்தியாசமானது. இல்லாதவைகளை இருக்கிறவைகள் போல் அழைக்கின்றவர். பெலவீனனை பெலவான் என்றும் அசுத்தனை பரிசுத்தவான் என்றும் நீதிமான் என்றும் அழைக்கின்றவர்தான் அவர். நாம் ஆராதிக்கின்ற ஜீவனுள்ள தேவன். ...