பெதஸ்தா குளம்


                
 

   எருசலேமில் ஆட்டு வாசலினருகே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் இருந்தது. பெதஸ்தா என்பது எபிரெய பாஷை ஆகும். அதற்கு ஐந்து மண்டபங்களுண்டு. அங்கே குருடர்கள், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையோர் முதலான வியாதிக்காரர்கள் படுத்திருந்து, எப்பொழுது குளத்தின் தண்ணீர் கலங்கும் என்று காத்துக் கொண்டிருப்பார்கள். ஏனென்றால், சில சமயங்களில் தேவதூதன் ஒருவன் அந்த குளத்தின் தண்ணீரை கலக்குவான். தண்ணீர் கலங்கின பின்பு யார் முதலில் இறங்குகிறார்களோ அவர்களுக்கு எப்பேர்ப்பட்ட வியாதி இருந்தாலும் சரியாகும். மரணத்துக்கேதுவான வியாதியாக இருந்தாலும், நெடுநாட்களாக தீராத வியாதியாக இருந்தாலும் சரியாகும். இவை பரலோக தேவன் தன்னுடைய பிள்ளைகளுக்கு பெதஸ்தா குளத்தில் செய்யும் அற்புதம் ஆகும். இதை நாம் பரிசுத்த வேதத்தில் வாசித்திருப்போம். 

    இந்தத் தீர்க்கதரிசன செய்தியில் பெதஸ்தா குளத்தில் சுகத்திற்காக காத்துக் கொண்டிருந்தவர்கள் யார் யார்? அவர்களுக்கு ஏன் வியாதி வந்தது? தூதன் தண்ணீரை கலக்கின பின்பு குளத்தில் இறங்கினால் வியாதி எப்படி சரியாகும்? இன்றைய நாட்களில் பெதஸ்தா குளத்தின் அனுபவம் உள்ளதா? போன்ற மிக ஆழ்ந்த இரகசியங்களை விரிவாக தியானிக்கப் போகின்றோம். இந்த செய்தியை கருத்துடன் வாசியுங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களுடன் பேசுவார். 

      அடிமைத்தனத்திலிருக்கும் இஸ்ரவேல் மக்களை மீட்டு இரட்சிக்க மேசியா வருவார் என்று மோசேயின் நியாயப்பிரமாணமும் கூறினது. தீர்க்கதரிசிகளும் கூறினார்கள். இது ஜனங்களுக்கு போதிக்கப்பட்டது. மக்கள் இதை ஆழமாக விசுவாசித்தார்கள். மேசியாவின் வருகைக்காக மிக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்கள். 

     காலங்கள் செல்ல செல்ல… நாட்கள் கடக்க கடக்க… அவர்களுடைய விசுவாசம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது. மேசியா வருவார் என்பதனை வெறும் உதட்டளவில் கூறினார்களே தவிர, எந்த ஒரு ஆயத்தமும் அவர்களிடமில்லை. அவருடைய வருகைக்கு எதிர்பார்த்து ஆயத்தமாக காத்திருக்கவுமில்லை. 

 ஆனால், ஒரு சிலர் விசுவாசத்தை விட்டு விலகாமல் வருகைக்கும், அவரை சந்திக்கவும் ஆயத்தமாக இருந்தார்கள். அப்படி யாரெல்லாம் ஆயத்தமாக இருந்தார்களோ அவர்களுக்கு மேசியாவாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்த வெளிப்பாடு கிடைத்தது. அவரை விசுவாசித்து இரட்சகராக ஏற்றுக் கொண்டார்கள். ஆயத்தமில்லாமல் இருந்தவர்களுக்கு மேசியாவைக் குறித்த வெளிப்பாடு கிடைக்கவில்லை. அப்படிப்பட்டவர்களை வலுசர்ப்பத்தின் ஆவி தாக்கி வியாதிகளையும், பலவீனங்களையும் கொண்டுவந்தது. அவர்களே வியாதி யுள்ளவர்களாகவும், பெலவீனத்தோடும் சுகத்தைப் பெற்றுக் கொள்வதற்காக பெதஸ்தா குளத்தின் அருகே காத்திருந்தார்கள். 

     தன்னுடைய சொந்தப் பிள்ளைகள் மதியீனத்தால் சத்தியங்களை அறியாமல், வியாதியோடும், வருத்தத்தோடும், ஊனத்தோடும்  இருப்பதை விரும்பாத கிருபையின் தேவன், அவர்கள் சுகம் பெற்று ஆரோக்கியத்துடன் வாழ்வதையே விரும்பி, சத்தியத்தை அறிந்து கொள்வதற்காகவும் ஒரு திட்டத்தை கொண்டு வந்தார். அதுதான் பெதஸ்தா குளத்தின் திட்டமாகும். 

     அதன்படி சில நேரங்களில் ஒரு தூதனை அனுப்பி குளத்தின் தண்ணீரை கலக்க செய்வார். தூதனும் குளத்தின் தண்ணீரை கலக்குவான். தண்ணீர் கலங்கின பின்பு யார் முதலில் இறங்குகிறார்களோ, அவர்களுக்கு எப்பேர்பட்ட வியாதி இருந்தாலும் சரியாகும். அவர்கள் பரலோகம் கொடுக்கின்ற சுகத்தினை பெற்றுக்கொள்வார்கள். இது எல்லாருக்கும் கிடையாது. தண்ணீர் கலங்கும் போது முதலில் இறங்குகின்ற ஒரு நபருக்கு தான் இந்த வாய்ப்பு கிடைக்கும். இந்த வாய்ப்பைப் பெற்றுக் கொண்டு, வியாதி நீங்கி ஆரோக்கியமடைவதற்காக வியாதியஸ்தர்கள் அநேகர் பெதஸ்தா குளத்தின் அருகே காத்திருந்தார்கள். 

       சரி இந்த வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்குமா? யார் இதைப் பெற்றுக் கொள்வார்கள்? என்று கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் எல்லாருக்கும் கிடைக்காது என்பதுதான் உண்மை. ஏனென்றால், தேவதூதன் எப்பொழுது வருவான் என்பதும், எந்த நேரம் வருவான் என்பதும் யாருக்குமே தெரியாது. அதிகாலை நேரத்தில் வரலாம் அல்லது மதிய வேளையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது வரலாம் அல்லது நடுராத்திரியில் நன்றாக தூங்கிக் கொண்டிருக்கும் போதும் வரலாம். எப்பொழுது என்பதை பரலோக தேவன் மட்டுமே அறிவார்.

     இப்பொழுது வந்துவிடுவானோ அடுத்த நிமிடம் வந்துவிடுவானோ என்று, ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு இமைப்பொழுதும், எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருந்து, வந்தவுடன் குளத்தில் இறங்க வேண்டும் என்று ஆயத்தமாக இருப்பவர்கள் மட்டுமே இந்த வாய்ப்பை பெற்றுக்கொண்டு பரலோகம் தரும் சுகத்தினை பெற்றுக்கொள்ள முடியும். தீராத வியாதியிலிருந்து விடுதலைப் பெற முடியும். மற்றவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்காது. 

    இப்படி ஆயத்தமாக இருந்து, தூதன் தண்ணீரை கலக்கியவுடன் குளத்தில் இறங்குகின்றவர்களை அந்த தண்ணீர் குணப்படுத்தாது. அது சாதாரண தண்ணீர்தான். அவர்கள் கற்றுக்கொண்ட ஆவிக்குரிய பாடம் மற்றும் ஆவிக்குரிய சத்தியமே அவர்களை குணப்படுத்தும். ஆம் ஒவ்வொரு நாளும் அவன் எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கும் போது அவர்களுக்குள் ஒரு பொறுமை, தாழ்மை, இச்சையடக்கம், அன்பு சமாதானம், விசுவாசம், நம்பிக்கை போன்ற ஆவியின் கனிகள் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகும். அது மாத்திரமல்ல கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தமாக இருப்பது எப்படி   என்பதனை அவர்கள் கற்றுக்கொள்வார்கள். இந்த சத்தியமே அவர்களுக்கு சுகத்தினை கொண்டுவரும். 

      இன்றைய நாட்களிலும் கூட திருடனைப் போல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வருவார் என்பது விசுவாசிகள் அனைவருக்கும் நன்கு தெரிந்த வேதசத்தியம் ஆகும். இதை ஆழமாக விசுவாசித்து, அவருடைய வருகையை எதிர்பார்த்து, ஆயத்தமாக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, அவருடைய இரகசிய வருகையைக் குறித்த வெளிப்பாடு கிடைக்கும். அவர்கள் பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம் அடைந்து வியாதிகளைக் கொண்டு வரும் பிசாசினை ஜெயித்து மறுரூபம் அடைவார்கள். மரணத்தை ஜெயிப்பார்கள். 

      ஆனால், விசுவாசத்தில் குறைவுப்பட்டு இரகசிய வருகைக்கு ஆயத்தமாக இல்லாமல் ஏனோதானோ என்று வாழ்பவர்களுக்கு வருகையைக் குறித்த வெளிப்பாடு கிடைக்காது. பிசாசு அவர்களைத் தாக்கி பலவிதமான வியாதிகளைக் கொண்டு வந்துவிடுவான். அவர்கள் சரீரம் ஆரோக்கியத்தினை இழந்து பாதிக்கப்படும். இதனால் சுகத்தினைப் பெற்றுக்கொள்ள மருத்துவமனையில் காத்துக் கொண்டிருப்பார்கள். எப்போது சுகம் கிடைக்கும் என்ற ஏக்கம் காணப்படும்.

   அப்படி காத்துக்கொண்டிருப்பவர்கள் தன் பாவத்தை அறிக்கைச் செய்து, எந்த பாவத்தை அறிக்கை செய்யவேண்டும்? என்று கேட்டால், கர்த்தரின் இரகசிய வருகைக்கு ஆயத்தமாக இல்லாமல் இருந்த பாவத்தை அறிக்கை செய்து, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வினாடியும், அவருடைய வருகையை எதிர்பார்த்து, தன்னைத்தானே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் சுத்திகரித்து, ஆயத்தமாக இருக்கும் போது, அவர்கள் மேல் மறுரூபத்தின் அபிஷேகம் இறங்கிவரும். செத்துப்போன அவர்களுடைய உறுப்புகள் மறுரூபமாகும். வியாதியிலிருந்து விடுதலை கிடைக்கும். ஆரோக்கியமாக வாழ்வார்கள். மெய்யான விடுதலை பெற்றுக்கொள்வார்கள்.  பெதஸ்தா குளத்தின் அனுபவம் அவருடைய வாழ்க்கையில் காணப்படும்.

     இந்த செய்தியை வாசித்த நீங்கள் இப்பொழுது உங்களை தேவ சமூகத்தில் ஆராய்ந்து பாருங்கள். சுகத்திற்காக பெதஸ்தா குளத்தின் அருகே காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்கள் குறைவுகளை தேவ சமூகத்தில் அறிக்கைச் செய்து ஒப்புரவாகுங்கள். பரலோக தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென். 

(பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)

Switch To ENGLISH    HINDI

தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here  

தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும்  எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில்  E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள      E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும்  கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here 

தீர்க்கதரிசன தியானங்களை  You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் ClickHere 

தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல்  பெற இதை கிளிக் செய்யுங்கள்.  Click Here 

Comments

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..