உங்களுடைய அழைப்பு எது?



      ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ அவரே மேசியா என்றும், பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங் கொடுப்பவர் என்றும் பிதாவாகிய தேவன் யோவான் ஸ்நானனுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்திருந்தார். அதன்படி, கர்த்தராகிய இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் பெறும்போது, பரிசுத்த ஆவியானவர் புறாவைப் போல வானத்திலிருந்து இறங்கி இவர் மேல் தங்கினதைக் கண்டான். எனவே, இயேசுவே மேசியா என்றும், தேவனுடைய குமாரன் என்றும் சாட்சி கொடுத்து வந்தான். (யோவான் 1: 29 - 34 ) கர்த்தராகிய இயேசுவே மேசியா என்பது அவனுக்கு உறுதியாக வெளிப்படுத்தப்பட்டது.     

      ஆனால், கடைசி நாட்களில்  யோவான்ஸ்நானகன் காவலில் இருக்கும்போது,  ’வருகின்றவர் நீர்தானோ? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்க வேண்டுமா?’ என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் கேட்கும்படி தன்னுடைய இரண்டு சீஷர்களை அனுப்பினான். பரலோக தேவனே ஒரு அடையாளத்தைக் காண்பித்து உறுதியாக வெளிப்படுத்தின பின்பும் இவர்தான் தேவனுடைய குமாரனாகிய மேசியாவா அல்லது வேறொருவரா என்று இடறல் அடைந்தான். ஏன் அவன் இடறல் அடைந்தான்? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீது மீது இடறல் அடைய காரணம்  என்ன? என்று கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் அதற்கு பல காரணங்கள் இருக்கின்றது. அதில் ஒன்று தன்னுடைய அழைப்பினைக் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளாமல் இருந்ததும் ஒரு காரணமாகும். அது எப்படி என்று இந்த தீர்க்கதரிசன செய்தியில் விரிவாகத் தியானிப்போம்.

     இந்தச் செய்தியை வாசிக்க ஆரம்பிக்கும்போதே பரலோக தேவனின் பிரசன்னத்திற்குள் வந்து விட்டீர்கள். எனவே, உங்கள் மீது பரிசுத்த ஆவியானவர் அசைவாடுகின்றார்.  அவர் வேதஇரகசியங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவார். ஆவிக்குரியக் கண்களைத் திறப்பார். ஒருவேளை உங்கள் ஆவிக்குரியக் கண்கள் குருடாக இருக்கலாம். இப்பொழுதே அது திறக்கப்படும். தரிசனங்களைக் காண்பீர்கள். ஆமென் . அல்லேலுயா.

    யூதேயாவின் வனாந்தரத்தில் வந்து மனந்திரும்புங்கள். பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம் பண்ணின யோவான் யோர்தான் நதியிலே ஞானஸ்நானம் கொடுத்தான். அநேக மக்கள்  அவனிடத்தில் வந்து, தங்கள் பாவங்களை அறிக்கை செய்து, தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம் பெற்றார்கள். பரிசேயரிலும், சதுசேயரிலும் அநேகர் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள். ( மத்தேயு : 3:1-7 ) 

      எருசலேமிலிருந்த யூதர்கள் இவன்  யாராக இருக்கும் என்று   சந்தேகப்பட்டார்கள். எனவே, ஆசாரியர்களையும் லேவியர்களையும் யோவானிடத்தில் அனுப்பி, ’நீர் யார்?’ என்று கேட்டு விசாரித்தார்கள். நீர் கிறிஸ்துவா? என்று கேட்டார்கள். அதற்கு யோவான் ஸ்நானகன் நான் கிறிஸ்து அல்ல என்று அறிக்கையிட்டான். பின்னும் அவர்கள் எலியாவா? என்று கேட்டார்கள். அதற்கும் ’நான் அவன் அல்ல’ என்று சொன்னான். பின்னும் அவனிடத்தில்  தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள். அதற்கும் இல்லை என்றே சொன்னான். எங்களை அனுப்பியவர்களுக்கு உத்தரவு சொல்லும்படிக்கு நீர் யார்? என்று அவர்கள் கேட்டபொழுது, கர்த்தருக்கு வழியைச் செவ்வைப்பண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான். ( யோவான் 1: 17- 23)

     உண்மையில் அவன் வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம்தான். அது அவனுடைய அழைப்புத்தான். ஆனால், அது மாத்திரம் அவனுடைய அழைப்பு அல்ல. நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால் எலியா இவன்தான் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறினார். எலியாவாகவும் அழைக்கப்பட்டிருந்தான். (மத்தேயு  11:14) அவன் பிறந்த பொழுது அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியினால் நிரம்பி ”நீயோ பாலகனே உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்” என்று கூறினான்.( லூக்கா: 1: 76) அவன் தீர்க்கதரிசியாகவும் அழைக்கப்பட்டிருந்தான். 

     வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தமாகவும், எலியாவாகவும்  மற்றும் தீர்க்கதரிசியாகவும் பரலோக தேவன் அவனை அழைத்திருந்தார். அவனுக்கு மூன்று விதமான அழைப்புகள் இருந்தது. இது யோவான்ஸ்நானனுக்கு தெரியவில்லை. எனவே, அவன் வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம் என்ற அழைப்பினை மட்டும் தெரிந்து கொண்டு, மற்ற அழைப்புகளைக் குறித்து தெளிவு இல்லாமல் இருந்தான். இதுவே அவன் இடறி விழுவதற்கும், சிறைச்சாலைக்கு செல்வதற்கும் காரணமாக இருந்தது. 

      ஆகையால், சகோதரரே உங்கள் அழைப்பையும்  தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள். இவைகளை செய்தால் ஒருக்காலும் இடறி விழுவதில்லை என்று அப்போஸ்தலனாகிய பேதுரு கூறுகின்றான். (2 பேதுரு.1:10)  பரலோக தேவன் நம்மை எதற்கு அழைத்திருக்கின்றார் என்பதனையும், என்ன செய்ய அழைத்திருக்கின்றார் என்பதனையும், நம்முடைய அழைப்பு எது என்பதனையும் முதலில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 

         சபை போதகராகவும், சுவிஷேசகனாகவும் அல்லது இரண்டு அழைப்புகளும் சேர்ந்தே இருக்கலாம். அல்லது தீர்க்கதரிசியாக அழைத்திருக்கலாம். இதனை தேவசமூகத்தில் உறுதிப்படுத்த வேண்டும். உறுதிப்படுத்தாமல் இஷ்டப்படி ஊழியம் செய்தால் இடறி விழ வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உறுதிப்படுத்தினால் நாம் ஒருக்காலும் இடற மாட்டோம் . 

          இதை வாசிக்கின்ற தேவனுடைய பிள்ளைகளே! பல விதமான அழைப்புகளை பரலோக தேவன் உங்களுக்கு கொடுத்திருக்கலாம்.  முதலில் உங்கள்  அழைப்பு எது என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு உற்சாகமாக ஊழியஞ்செய்யுங்கள். இடறி விழாமல் எழுந்து நில்லுங்கள். சமாதானத்தின் தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென் . 

இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.

 (பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)

தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here 

தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும்  எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில்  E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள      E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும்  கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here 

தீர்க்கதரிசன தியானங்களை  You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here 

தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல்  பெற இதை கிளிக் செய்யுங்கள்.  Click Here 

Comments

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..