வணங்காக்கழுத்து
தேவன் தம்முடைய சுய இரத்தத்தினாலே சபையை சம்பாதித்தார். (அப்போஸ்தலர் 20:
28) உலகத்தில் பல திருச்சபைகள் உள்ளன.
சபைகளில் பல்வேறு பிரிவுகள் காணப்படுகின்றன. எல்லா சபைகளுக்கும் தலைவர்
கிறிஸ்துவே. அவருக்கே எல்லா சபைகளும் கீழ்ப்படிகின்றன.( எபேசியர் 5: 23,24 ) எல்லாப் பிரிவு திருச்சபைகளிலும்
பரிசுத்த ஆவியானவர் அசைவாடுகின்றார்.
அப்படியிருக்க சில சபைகள்
பாரம்பரியமாகவும், சில சபைப்பிரிவுகள் மிகக்
கடினமாகவும், சில சபைகள் இலகுவாகவும் தங்களுடைய விசுவாசிகளை நடத்துகின்றன. நகை அணியக்
கூடாது என்றும், மீசை வைக்க கூடாது என்றும், வெள்ளை நிறத்தில்தான் உடைகளை உடுத்த
வேண்டும் என்றும், கடினமாக நடத்துகின்ற சபைகளும் காணப்படுகின்றன.
ஆவிக்குரிய சபைகளில் ஏன் இந்த வித்தியாசங்கள் காணப்படுகின்றன? சபைக்கு சபை
வித்தியாசமாக இருக்க காரணங்கள் என்னென்ன? நகை அணிவது பாவமா? யாரெல்லாம் நகை அணியக் கூடாது?
தேவன் யாரையெல்லாம் நகையை கழற்ற சொல்லுவார்? என்பதாய் என்னிடத்தில் ஒரு சகோதரர் தன்னுடைய சந்தேகங்களை கேள்வியாக
கேட்டார். இது போன்ற கேள்விகள் நம்மில் பலருக்கும் உண்டு. இதற்கு விடை காணும் விதமாக
இந்த தீர்க்கதரிசன செய்தியில் தியானிக்கலாம். ஜெபத்துடன் வாசியுங்கள். பரிசுத்த
ஆவியானவர் நிச்சயமாக உங்களுடன் பேசுவார்.
பரிசுத்த வேதத்தில் கர்த்தர் மோசேயின் மூலமாக இஸ்ரவேல் மக்களை எகிப்தின்
அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கி கானானுக்குள் அழைத்து சென்றார். செல்லும்
வழியில் வனாந்தரத்தில், நீங்கள் வணங்காக்கழுத்துள்ள ஜனங்கள்; நான் ஒரு நிமிஷத்தில்
உங்கள் நடுவில் எழும்பி உங்களை நிர்மூலம்பண்ணுவேன்; ஆகையால், நீங்கள்
போட்டிருக்கிற உங்கள் ஆபரணங்களை கழற்றி போடுங்கள்; அப்பொழுது நான் உங்களுக்கு
செய்யவேண்டியதை அறிவேன் என்று சொன்னார்.(யாத்திராகமம் 33 : 5) ஏன் வனாந்தரத்தில்
ஆபரணங்களை கழற்றச் சொன்னார்? பரலோக தேவன் சொல்ல வேண்டியக் காரணம் என்ன? முதலில் இதன் இரகசியம்
தெரிந்தால்தான் நம்மில் யாரெல்லாம் நகையை கழற்ற வேண்டும் என்ற வெளிப்பாடு கிடைக்கும்.
சரி ! ஏன் நகையை கழற்றச் சொன்னார்? இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று நகையை விக்கிரகமாக மாற்றுவது; மற்றொன்று
தேவனுடைய நியமத்திற்கு கீழ்ப்படியாமல் எதிர்த்து நிற்பது ஆகும். இஸ்ரேல் மக்கள்
இந்த இரண்டையும் செய்தார்கள். அதனால்தான் சர்வவல்லதேவன் நகையை கழற்றச் சொன்னார்.
இதைக்குறித்து கொஞ்சம் விரிவாக தியானிப்போம்.
இஸ்ரவேல் மக்கள் 430 வருடம் எகிப்தில்
அடிமைகளாக இருந்தார்கள். அடிமைத்தனத்தின் வாழ்க்கையில் இருந்து கானானுக்கு
புறப்பட்டார்கள். மோசே என்ற தீர்க்கதரிசி மூலமாக சர்வவல்ல தேவன் அவர்களை
வழிநடத்தினார். எகிப்திலிருந்து புறப்படும்போது தேவனுடைய ஆலோசனையின்படி இஸ்ரவேல்
ஜனங்கள் எகிப்தியரிடத்தில் வெள்ளியுடைமைகளையும்
பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டார்கள். கர்த்தர் எகிப்தியரின் கண்களில் தயவைக் கட்டளையிட்டபடியினால் கேட்டதை கொடுத்தார்கள். இவ்விதமாய் எகிப்தியரை
கொள்ளையடித்து வெள்ளியுடமைகளையும் பொன்னுடமைகளையும் கொள்ளைப்பொருட்களாக
எடுத்துக்கொண்டு எகிப்திலிருந்து புறப்பட்டார்கள். இது பரலோக தேவன் கொடுத்த
ஆசீர்வாதங்கள் ஆகும்.(யாத்திராகமம் 12:36,37)
வனாந்தரத்தில் பல அற்புதங்களை செய்து அடையாளங்களைக் காட்டி பரலோக தேவன்
வழிநடத்தினார். மேலும் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பிரமாணங்களையும்,
கற்பனைகளையும் கொடுத்தார். மோசே 40 நாட்கள் தேவசமூகத்தில் அமர்ந்து ஜெபிப்பதற்காக மலைக்குச்
சென்றான். அவன் மலையிலிருந்து இறங்கி வரத்தாமதம் ஆனபோது ஜனங்கள் ஆரோனிடத்தில்
கலகம் செய்தார்கள். மோசேக்கு என்ன சம்பவித்தது அறியோம்; ஆதலால் நீர் எழுந்து
எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும் என்றார்கள். (யாத்திராகமம்
32:1)
விலையுயர்ந்த ஆபரணங்களை கேட்டால் அவர்கள் தர மாட்டார்கள் என்று எண்ணின
ஆரோன் அவர்களை சமாளிப்பதற்காக உங்கள் மனைவிகள், குமாரர்கள், குமாரத்திகளுடைய
காதுகளில் இருக்கின்ற பொன்னணிகளை கழற்றி என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்.
விக்கிரகங்களை செய்ய அவர்கள் தர மாட்டார்கள் என்று ஆரோன் எண்ணினான். ஆனால்,
அதற்குப் பதிலாக எகிப்தியர்களிடம் இருந்து கொள்ளைப் பொருளாக எடுத்து வந்த பொன்
ஆபரணங்களை விக்கிரகங்கள் செய்ய கழற்றி ஆரோனிடத்தில் கொடுத்தார்கள். ஒருவர் இருவர்
மாத்திரமல்ல எல்லோரும் கொடுத்தார்கள். தேவன் தந்த நகையை விக்கிரகம் செய்ய
கொடுத்தார்கள்(யாத்திராகமம் 32:3)
அவர்கள் கையிலிருந்து பொன்னாபரணங்களை வாங்கின ஆரோன் சிற்பக் கருவியினால்
கருப்பிடித்து ஒரு கன்றுக்குட்டியை உருவாக்கினான். அதைப் பார்த்த மக்கள் உங்களை
எகிப்து தேசத்திலிருந்து அழைத்து வந்த உங்கள் தெய்வங்கள் என்று சொல்லி
பலிபீடத்தைக் கட்டி பண்டிகை கொண்டாடினார்கள்.
தேவன் மோசேயின் மூலமாக 10 கட்டளைகளை கொடுத்தார். முதலாம் கட்டளை
"என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்" என்றும், இரண்டாம் கட்டளை "யாதொரு
விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம், அவைகளை நமஸ்கரிக்கவும்
சேவிக்கவும் வேண்டாம்" என்பதாகும். இந்த இரண்டு கட்டளைகளையும் விட்டு சீக்கிரமாக
வழி விலகினார்கள்.
இதைப்பார்த்த தேவன் வணங்காக்கழுத்துள்ள ஜனங்கள் என்று சொல்லி, அவர்கள்மேல்
கோபப்பட்டார். மோசே அவர்களுக்காக பரிந்துப் பேசினான். மோசேயின் ஜெபத்தை கேட்டு
மறுபடியும் அவர்களை வனாந்தரத்தில் நடத்தும்போதுதான் நீங்கள் போட்டிருக்கின்ற
ஆபரணங்களை கழற்றி போடுங்கள் என்றார்.
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் காரியம் என்னவென்றால் தேவன் நமக்கு தரும்
ஆசீர்வாதங்களை விக்கிரகங்களாக மாற்றும்போதும், பரலோகதேவனுடைய வார்த்தைக்கு
கீழ்ப்படியாமல் எதிர்த்து நிற்கும் போதும், ஆபரணங்களை கழற்றச் சொல்கின்றார்.
நான் பள்ளிக்கூடங்களில் படித்த நாட்களில் இரண்டு பள்ளிக்கூடங்கள் எனது
ஊரின் அருகில் இருந்தது. ஒன்று மிகவும் கண்டிப்பாகவும், மற்றொன்று, கொஞ்சம்
கண்டிப்பு இல்லாததாகவும் இருந்தது. தன்னுடைய பிள்ளைகளின் நிலையை அறிந்த
பெற்றோர்கள், எந்த பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும் என்பதனை முடிவு செய்வார்கள்.
தகப்பன் சொற்பேச்சைக் கேட்காமல், கீழ்ப்படியாமல், எதிர்த்துப்பேசும் பிள்ளைகளை
கண்டிப்பு அதிகமாக உள்ள பள்ளிக்கூடத்தில் சேர்ப்பார்கள். ஏனென்றால், அங்கே
சென்றால்தான் ஒழுக்கத்தில் வளருவார்கள். பெற்றோர்களின் சொற் பேச்சுகளைக் கேட்கும்
பிள்ளைகளை கண்டிப்பு இல்லாத பள்ளிக்கூடத்தில் சேர்ப்பார்கள்.
அதேப்போல்தான் ஆவிக்குரிய வாழ்க்கையில் சிலர் கர்த்தருடைய வார்த்தைக்கும்,
நியமத்திற்கும் கீழ்ப்படிவார்கள். கொஞ்சம் கூட எதிர்த்துப் பேசமாட்டார்கள்.
அவர்களை கண்டிப்பு குறைவாக இருக்கும் சபைக்கு வழிநடத்துவார். அவர்களுக்கு அது
போதுமானதாக இருக்கும். சிலர் வணங்காக் கழுத்துள்ளவர்களாக இருந்து தேவனுடைய நியமத்திற்கும், அவருடைய
வார்த்தைக்கும் கீழ்ப்படியமாட்டார்கள். அடங்காதவர்களாக இருந்து கணவனை எதிர்த்துப்
பேசுவார்கள். ஊழியர்களை எதிர்த்து பேசுவார்கள். சபையின் நியமத்திற்கு எதிர்த்து
நிற்பார்கள். அவர்கள் நியமத்தினைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக கடினமான
உபதேசங்களை போதிக்கும் சபைக்கு பரலோக தேவன் வழிநடத்துவார்.
அங்கே நகையை கழற்றுங்கள், மீசையை எடுங்கள், கலர் சட்டை போடக் கூடாது, அதைச்
செய்யக்கூடாது, இதைச் செய்யக்கூடாது என்று கடினமாக நடத்துவார்கள். அதற்குக்
கீழ்ப்படியவில்லை என்றால் சிட்சைகள் கொடுக்கப்படும். ஆசீர்வாதங்கள் கிடைக்காது.
அப்படி கடினமாக நடத்தி நடத்தி அவர்களுக்குள்ளாக இருக்கும் வணங்காக்கழுத்துகளையும்,
கீழ்ப்படியாமையையும் எடுத்துப் போடுவார்கள். இதன்மூலம் கீழ்ப்படிதலைக்
கற்றுக்கொள்வார்கள்.
இதை வாசிக்கின்ற தேவனுடைய பிள்ளைகளே! உங்களை நீங்களே சோதித்துப்பாருங்கள்.
உங்களுக்கு எப்படிப்பட்ட உபதேசம் வேண்டும் என்பதனை நீங்களே முடிவு செய்து
கொள்ளுங்கள்.
இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.
(பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)
தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன
செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல் பெற இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Comments
Post a Comment