ஓ…சமாரியா பெண்ணே…


 

       பரிசுத்த வேதத்தில் புதிய ஏற்பாட்டில் யோவான் 4ம் அதிகாரத்தில் ஒரு சமாரியப் பெண்ணைக் குறித்து வாசித்திருக்கலாம். இவளுடைய பெயர் என்ன என்பதனை இங்கு குறிப்பிடவில்லை. இவள் ஆறு ஆண்களோடு வாழ்ந்தாள் என்பதனை அறிந்துக்கொள்ளலாம்.

      கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவளிடம், ’உன் புருஷனை இங்கு அழைத்துக் கொண்டு வா’ என்று சொன்னபொழுது, அவள் நினைத்திருந்தால் கடைசியாக அவளோடு வாழ்கின்ற மனிதனை அழைத்துக்கொண்டு வந்து, இவன்தான் என் புருஷன் என்று பொய் சொல்லியிருக்கலாம். அப்படி சொல்லாமல் இப்பொழுது இந்த நேரத்தில் என்னோடு குடும்பம் நடத்துகின்றவன் என்னுடைய புருஷன் இல்லை என்று உண்மையைச் சொன்னாள்.

    பாவ வாழ்க்கையிலும் அவளிடம் இருந்த உண்மையைக் கண்ட கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆவிக்குரிய ஆழமான இரகசியங்களை அவளுக்குக் கற்றுக் கொடுத்தார். உலக மக்களின் பாவங்களைச் சுமந்து தீர்க்கின்ற ஆட்டுக்குட்டி நானே என்று சொல்லி, தான் மேசியா என்பதனை அவளுக்கு வெளிப்படுத்தினார். என்ன ஒரு சிலாக்கியம்

      அவளும் துரிதமாக தன் ஊராரிடத்தில் சென்று, நான் செய்த எல்லாவற்றையும் எனக்கு சொன்னார் என்று சாட்சி சொன்னாள். அவளுடைய சாட்சியினிமித்தம் சமாரியர் அநேகர் விசுவாசித்து அவரை மேசியாவாக முழுமனதுடன் ஏற்றுக் கொண்டார்கள். 

   பாவியான அந்த ஸ்திரீயீடம் காணப்பட்ட உண்மையினிமித்தமும், அவள் துரிதமாக செய்த ஊழியத்தினிமித்தமும், சமாரியர்கள் அநேகர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டார்கள். உண்மையிலேயே அந்த ஸ்திரீயின் செயல் பாராட்டப்படக்கூடியது. இந்த சம்பவங்களை பரிசுத்த வேதத்தில் பலமுறை வாசித்திருப்போம். பல பிரசங்கங்களில் கேள்விப்பட்டிருப்போம்.

       இந்த தீர்க்கதரிசன செய்தியில் உண்மையுள்ள அந்த ஸ்திரீயின் வாழ்க்கையில் எப்படி ஆறு புருஷர்கள் வந்தார்கள்? நல்ல செயல் செய்த அவள் கணவன் தவிர மற்ற ஐந்து ஆண்களுடன் குடும்பம் நடத்தக் காரணம் என்ன? பல ஆண்களுடன் எதனால் தொடர்பு ஏற்பட்டது? இன்றைக்கும் அநேகருக்கு பலருடன் தொடர்பு ஏற்பட காரணம் என்னவாக இருக்கலாம்? என்பதனைக் குறித்து கொஞ்சம் ஆழமாக, விரிவாக ஜெபத்துடன் தியானிக்க போகின்றோம். கருத்தாக வாசியுங்கள் பல ஆவிக்குரிய இரகசியங்களை கற்றுக்கொள்வீர்கள். இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள். 

      மதியம் 12 மணிக்கு பிரயாணத்தினால் இளைப்படைந்தவராய், சமாரியாவில் சீகார் என்னப்பட்ட ஊரில் உள்ள யாக்கோபுடைய கிணற்றுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வந்தார். அவருடைய சீஷர்கள் மதிய சாப்பாடு வாங்குவதற்கு பக்கத்து ஊருக்கு சென்றிருந்தார்கள். இந்த கிணற்றில்தான் முற்பிதாவாகிய யாக்கோபும், அவனுடைய பிள்ளைகளும் தண்ணீர் குடித்தார்கள். அவனுடைய மிருகஜீவன்களும் தண்ணீர் குடித்தது.

   அந்தக் கிணற்றுக்கு மதிய நேரத்தில் சமாரிய நாட்டாளாகிய அந்த ஸ்திரீ குடத்துடன் தண்ணீர் எடுக்க வந்தாள். இயேசுகிறிஸ்து அவளை நோக்கி: தாகத்துக்குத் தா என்றார். அதற்கு அவள்: நீர் யூதனாயிருக்க சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில் தாகத்துக்குத் தா என்று எப்படிக் கேட்கலாம் என்று பதில் கூறினாள். ஏனென்றால், யூதர்கள் சமாரியருடன் சம்பந்தம் வைக்கமாட்டார்கள். அதனால் அவள் அப்படி கேட்டாள்.

    ’நான் யார் என்பதனையும், பரலோக தேவனின் ஈவையும் நீ அறிந்திருந்தால், நீயே என்னிடத்தில் கேட்டிருப்பாய். நான் உனக்கு ஜீவத்தண்ணீரை தந்திருப்பேன்’ என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சொன்னார்.

       அவர் அவளிடம் ஆவிக்குரிய இரகசியங்களை பேசினார். அவளோ அதை உணராமல் மாம்சீகமாக யோசித்து, கிணறும் ஆழமாக இருக்கின்றது, தண்ணீர் எடுக்க உம்மிடத்தில் பாத்திரமும் இல்லை. அப்படியிருக்க எங்கேயிருந்து ஜீவத்தண்ணீர் வரும் என்று அவரிடத்தில் கேட்டாள். 

    இந்தக் கிணற்றுத் தண்ணீரை யார் குடித்தாலும் அவர்களுக்கு மறுபடியும் தாகம் உண்டாகும். ஆனால், நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகம் உண்டாகாது. அது நித்திய ஜீவகாலமாய் ஊறுகின்ற நீரூற்றாக இருக்கும் என்று சொன்னார். 

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியானவரைப் பற்றி கூறினார். அவளோ குடிக்கும் தண்ணீர் என்று நினைத்து, அவரிடம் எனக்கு தாகம் வராமலும், இங்கே வந்து தண்ணீரை எடுக்காமலும் இருக்கும்படி அந்த தண்ணீரை எனக்கு தர வேண்டும் என்றாள்.

        அவள் சொன்ன இந்த வார்த்தைகளைக் கொஞ்சம் ஆழமாக இங்கே தியானிக்க வேண்டும். இந்த உலகத்தில் வாழும்வரை, உயிர் வாழ்வதற்காக, மாம்சத்தின் தேவைக்காக தண்ணீரைக் குடிக்கவேண்டும்.  குடித்தால் மறுபடியும் தாகம் உண்டாகும். அப்படித் தாகம் எடுக்கும்போது மறுபடியும் தண்ணீரைக் குடிக்க வேண்டும். தண்ணீர் இல்லாமல் காலியாக இருந்தால், குடத்தை எடுத்துக்கொண்டு கிணற்றுக்கு சென்று தண்ணீர் எடுக்க வேண்டும். இது தொடர்ச்சியாக மாறி மாறி நடக்கும் காரியம்தான். இது கொஞ்சம் கஷ்டத்தைத் தரும். ஆனாலும், இதை சகித்து தான் ஆக வேண்டும். இது உலகத்தில் வாழ்கின்ற அனைவருக்கும் பொருந்தும்.

    ஆனால், அவளோ இந்த சின்ன கஷ்டம் கூட இருக்கக்கூடாது என்று நினைத்து, வாழ்நாள் முழுவதும் எனக்கு தாகமே வரக்கூடாது என்றும், பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கிணறு பக்கமே வரக்கூடாது என்றும், அந்தத் தண்ணீரை எனக்கு தர வேண்டும் என்று கேட்டாள்.

      இதிலிருந்து, அவள் சொன்ன இந்த வார்த்தையிலிருந்து, அவளுடைய சுபாவத்தினை நன்றாக அறிந்துக்கொள்ள முடிகின்றது. உலக வாழ்க்கையில் வரும் சின்ன சின்ன கஷ்டங்களை கூட தாங்க முடியாதவளாகவும், அதை எதிர்த்து சமாளிக்க முடியாதவளாகவும் இருந்திருக்கின்றாள். ஏதாவது ஒரு கஷ்டம் வந்தால், இனி அது வாழ்க்கையில் ஒருபோதும் வரக்கூடாது என்பதற்காக அதை விட்டு நிரந்தரமாக விலகிச்செல்கின்றவளாக யோசித்து கிரியைகளை செய்திருக்கின்றாள்.

        புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப் போடுகின்றாள் என்று நீதிமொழிகள் 14:1-ல் வாசிக்கலாம். அவளுடைய குடும்ப வாழ்க்கையில் கணவன்-மனைவிக்குள் சர்வசாதாரணமாக வரும் சின்ன சின்ன பிரச்சனைகள், கஷ்டங்கள் வந்திருக்கின்றது. அவள் அதை ஞானத்தோடும், புத்தியோடும் எதிர்த்து சமாளித்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல், இனி இந்த வாழ்க்கை வேண்டாம். இவனோடு குடும்பம் நடத்த வேண்டாம். இவன் நல்லவன் இல்லை. இவனோடு வாழ்ந்தால் பிரச்சனைதான் வரும். வாழ்க்கையில் சமாதானம் இருக்காது என்று நினைத்து புத்தியில்லாதவளாக குடும்பத்தை உடைத்து விட்டாள். இதனால், கணவனை விட்டு அவள்   பிரிந்திருக்கலாம் அல்லது அவன் இறந்திருக்கலாம். பின்பு  வேறு ஒருவனை திருமணம் செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டாள். கட்டின கணவனை விட்டுப் பிரிந்து விட்டாள்.

     நீதியின் படி கட்டின கணவனிடமே அவளால் வாழ்க்கை என்ற கப்பலை நகர்த்த முடியவில்லை என்றால் மற்றவர்களிடம் எப்படி முடியும்? அடுத்தடுத்து என பல ஆண்கள் அவளுடைய வாழ்க்கையில் வந்துவிட்டார்கள். இப்பொழுது, ஆறு ஆண்களுக்கு மனைவி என்றும், ஆறு ஆண்களுடன் வாழ்ந்தவள் என்ற நிலைக்கு வந்துவிட்டாள். ஒரு அவமான வாழ்க்கைக்கு சொந்தக்காரியாகிவிட்டாள். இப்படித்தான் அவளுடைய வாழ்க்கையில் பல ஆண்கள் வந்தார்கள்.

      குடும்ப வாழ்க்கை என்பதும், கணவன்- மனைவியாக குடும்பம் நடத்துவது என்பதும் மிக எளிதான இலேசான காரியமல்ல. சின்ன சின்ன சண்டைகள், பிரச்சனைகள், போராட்டங்கள், கஷ்டங்கள், சோர்வுகள், முறுமுறுப்புகள், சமாதானக் குலைச்சல்கள், விரக்தி, ஒருமனமில்லாமை வரத்தான் செய்யும். கண்டிப்பாக வரும். யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. 

       அப்படி வரும் இடறல்களை பரலோகம் கொடுக்கும் ஞானத்தோடும், புத்தியோடும் சமாளிக்க வேண்டும். அதற்கு எதிர்த்து நிற்க வேண்டும். மாறாக, இவன் வேண்டாம்… இவள் வேண்டாம்… என்று சொல்லி தேவன் தந்த துணையை விட்டுப் பிரிந்து விடக்கூடாது. ’டைவர்ஸ்’ பண்ணிவிட்டு வேறொரு திருமணம் செய்யலாம் என்று பேசக்கூடாது. மீறும்போது பல ஆண்கள் அல்லது பல பெண்கள் வாழ்க்கையில் வந்துவிடுவார்கள். ஊர் உலகத்திற்கு இலச்சையாக மாறிவிடுவோம்.

     இந்த செய்தியை கருத்தாக வாசித்த தேவனுடைய பிள்ளைகளே! இந்த சமாரிய ஸ்திரீயின் வாழ்க்கையிலிருந்து பல காரியங்களை பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளார். அவர் உங்களோடு பேசின வார்த்தைக்கு உங்களை ஒப்புக்கொடுங்கள். அதற்கு கீழ்ப்படியுங்கள். உங்கள் குடும்பம் கட்டப்படும். ஆமென்.

 (பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)

Switch To ENGLISH    HINDI

தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here  

தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும்  எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில்  E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள      E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும்  கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here 

தீர்க்கதரிசன தியானங்களை  You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here 

தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல்  பெற இதை கிளிக் செய்யுங்கள்.  Click Here 

Comments

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..