வனாந்திரம்
சகல துதி, கனம், மகிமை, புகழ்ச்சி, கீர்த்தி, பெருமை எல்லாவற்றையும் பரலோக
பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியாகிய
தேவனுக்கும் உண்டாகட்டும். வனாந்திரம் என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை
வாசிக்க லிங்கை கிளிக் செய்து வாஞ்சையாய் வந்த உங்களுக்கு கர்த்தராகிய இயேசு
கிறிஸ்துவின் நாமத்தினாலே தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக எங்களுடைய
அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயம் சர்வவல்ல தேவன் உங்களை
மத்தேயு 4:15-ன் படி ஆசீர்வதித்து
உயர்த்துவாராக.
கிறிஸ்துவுக்குள் நம் வாழ்க்கை நன்றாக
சென்று கொண்டிருக்கும். ஒரு குறைவும் இருக்காது. ஆனால், ஒரு நேரத்தில்
வனாந்திரத்தினை உணருவோம். ஏதோ ஒன்றை இழந்து குறைவுள்ளவர்களாக காணப்படுவோம். ஏன்
இந்த நிலைமை என்பது நமக்கு தெரியாது. ஏன் இந்த வனாந்திரம் என்று புலம்புவோம்.
ஆனால், அது பரலோகம் அனுமதித்திருக்கும். ஏன் பரலோகம் அந்த வனாந்திரத்தினை
அனுமதிக்க வேண்டும்? கொஞ்சம் தியானிக்கலாம் ஜெபத்துடன் வாசியுங்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வாழ்ந்துகொண்டிருந்த
காலத்தில் பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு வனாந்திரத்திற்கு ஆவியானவரால் கொண்டுப்
போகபட்டார் என்று மத் 4:1-ல் வாசிக்கலாம். இதில் கவனிக்க வேண்டிய வார்த்தை உள்ளது.
ஆவியானவரால் என்பதுதான் அது. அதாவது பிசாசினால் சோதிப்பதற்காக ஆவியானவரே
வனாந்திரத்திற்கு கொண்டு சென்றார். இந்த சோதனையை தடுக்க முடியாது. வேண்டாம் என்று
சொல்லவும் முடியாது. ஆவியானவரே சோதனைக்கு கொண்டு செல்லும்போது அதற்காக ஜெபிக்கவும்
முடியாது. வனாந்தரம் நிச்சயம் வரும். இதனால்தான் வனாந்திரத்தினை நம் வாழ்க்கையில்
பார்க்க முடிகின்றது.
சரி இந்த வனாந்திர
நேரத்தில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்தால் இந்த வனாந்திரம் நம்மை விட்டு
செல்லும் என்று யோசிக்கலாம். வனாந்திரத்தினை அனுமதித்ததன் நோக்கமே பிசாசின்
சோதனையை ஜெயித்து ஜெயமெடுப்பதற்காகத்தான். எனவே, பிசாசு கொண்டு வரும் எல்லா
சோதனைகளையும் ஜெயித்து ஜெயமெடுக்க வேண்டும். அப்படி ஜெயம் எடுத்தால் மட்டுமே
வனாந்திரம் நம்மைவிட்டு வெளியே செல்லும். வேறு எந்த விதத்திலும் செல்லாது.
சிலர் பிசாசினை
ஜெயமெடுப்பது இல்லை. மாறாக வனாந்திரங்களை கண்டு திகைத்து நிற்பார்கள். தேவன்
கைவிட்டுவிட்டார் என்று புலம்புவார்கள். இதனால் தொடர்ந்து வனாந்திரம் வாழ்க்கையில்
காணப்படும். ஜெயமெடுக்கும் வரைக் காணப்படும். எனவே, நம் வாழ்க்கையில் பிசாசு
கொண்டுவரும் சோதனைகளை ஜெயம் எடுப்போம். வனாந்திரத்தில் இருந்து விடுதலை பெறலாம்.
(பிதா,
குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை
உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள்,
நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக
இருக்கும்.)
Comments
Post a Comment