துரோகி
சகல துதி, கனம், மகிமை, புகழ்ச்சி, கீர்த்தி, பெருமை எல்லாவற்றையும் பரலோக பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கும் உண்டாகட்டும். துரோகி என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை வாசிக்க லிங்கை கிளிக் செய்து வாஞ்சையாய் வந்த உங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக எங்களுடைய அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயம் சர்வவல்ல தேவன் உங்களை ஆதியாகமம் 15:1-ன் படி ஆசீர்வதித்து உயர்த்துவாராக.
லூக்கா 6:16-ல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு சீடர்களை அறிமுகப்படுத்தும்போது, பரிசுத்த ஆவியானவர் யூதாஸ்காரியோத்தை துரோகி என்று அறிமுகப்படுத்துகிறார். உண்மையிலே யூதாஸ்காரியோத் என்பவன் யார்? அவன் துரோகியாக இருந்தானா? என்று ஆராய்ந்து பார்க்கும் போது ஆரம்பத்தில் அவன் துரோகியாக இல்லை. பன்னிரண்டு சீஷர்களில் ஒருவனாக இருந்து சகல அசுத்த ஆவிகளை துரத்தவும், வியாதிகளை சொஸ்தமாக்கி, மரித்தோர்களை உயிரோடு எழுப்பவும் அதிகாரமுள்ளவனாக இருந்தான். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எங்கு சென்றாலும் அவரோடு செல்கின்றவனாகவும் இருந்தான்.
இப்படிப்பட்ட யூதாஸ்காரியோத் எப்படி துரோகியாக மாறினான்? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகின்ற நாமும் துரோகியாக மாறிவிட வாய்ப்புள்ளதா? கடைசி காலத்தில் அநேக விசுவாசிகள் விசுவாசத்தை மறுதலித்து எப்படி துரோகிகளாக மாறுவார்கள்? என்பதனை இந்த தீர்க்கதரிசன செய்தியில் விரிவாக தியானிப்போம். ஜெபத்துடன் வாசியுங்கள். பரிசுத்த ஆவியானவர் நிச்சயம் பேசுவார். இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன, பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு பன்னிரண்டு சீஷர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் இந்த யூதாஸ்காரியோத். எல்லாரும் சீஷனாக இருக்க முடியாது. சீஷன் என்பவன் தகப்பனையும், தாயையும், மனைவியையும், பிள்ளைகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், ஏன் தன் ஜீவனையும் வெறுக்க வேண்டும். தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை சுமக்கின்றவனாக இருக்க வேண்டும். நிலம், வீடு, ஆஸ்தி என தனக்குண்டான எல்லாவற்றையும் வெறுக்கின்றவனாக இருக்க வேண்டும். அப்படி வெறுக்கின்றவர்கள்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகின்ற சீஷர்களாக இருக்க முடியும்.(லூக்கா14:26-35)
ஆரம்பத்தில் யூதாஸ்காரியோத் தனக்குண்டான எல்லாவற்றையும் விட்டு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகின்றவனாக இருந்தான். ஊழியத்தில் பணப்பையை சுமப்பதும், தேவையான பொருட்களை வாங்குவதும், தரித்திரருக்கு கொடுப்பதும் அவனுடைய வேலை (யோவான் 13:29). ஊழியத்திற்கு வருகின்ற காணிக்கையை பார்க்கும்போது, அவனுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக பண ஆசை வந்தது. தன்னுடைய சின்ன சின்ன தேவைகளுக்காக பணத்தை திருடுகின்றவனாக இருந்தான். எப்பொழுதும் பணத்திலே குறியாக இருந்தான்.
ஒரு நாள் வந்தது பிரதான ஆசாரியரிடத்திற்கு சென்று ”நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை காட்டி கொடுக்கின்றேன். நீங்கள் எனக்கு என்ன தருவீர்கள்” என்றான். அவர்களும் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசை கொடுக்க உடன்பட்டார்கள். (மத்தேயு 26:15) முப்பது வெள்ளிக்காசுக்காக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை காட்டிக் கொடுத்தான். கடைசியில் துரோகி என்ற பட்டத்தினைப் பெற்றான்.
மனுஷகுமாரன் வரும் நாட்களில் பூமியில் விசுவாசத்தைக் காண்பாரோ என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சொன்னார் (லூக்கா 18:8). விசுவாச துரோகம் முந்தி நேரிட வேண்டும் என்று 2தெசலோனிக்கேயர் 2:3-ல் வாசிக்கின்றோம். கடைசி காலத்தில் ஒரு கூட்ட விசுவாச துரோகிகள் எழும்புவார்கள். இவர்கள் ஆரம்பக்காலத்தில் ஆண்டவருக்காய் எல்லாவற்றையும் விட்டுவிட்டவர்கள். நாட்கள் செல்ல செல்ல உலக ஆசை அவர்களுக்குள் வந்துவிடும். உலகத்தின் மனிதர்களைப்போல வாழ நினைப்பார்கள். கர்த்தராகிய இயேசுவுக்காக விட்டதை பிடிக்க நினைப்பார்கள். பணம் பணம் என்று பணத்திலே குறியாக இருப்பார்கள். பணத்திற்காக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தை மறுதலிக்க தயங்கமாட்டார்கள்.(1 தீமோத்தேயு 6:10) இவர்களே கடைசிகால விசுவாச துரோகிகள் ஆவார்கள்.
இதை வாசிக்கின்ற தேவனுடைய பிள்ளைகளே! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்காக நீங்கள் நிறைய காரியங்களை விட்டு விட்டு வந்திருப்பீர்கள். அப்படி எதையெல்லாம் விட்டு வந்தீர்களோ, அது விட்டதாக இருக்கட்டும். மறுபடியும் அதன் மீது ஆசை வேண்டாம். அதைப் பிடிக்க நினைத்தால் விசுவாசத்தை மறுதலித்து துரோகியாக மாறிவிட வாய்ப்புள்ளது.
(பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP - ல் இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Comments
Post a Comment