மிகுந்த ஆஸ்தி வேண்டுமா?
சகல துதி, கனம், மகிமை, புகழ்ச்சி, கீர்த்தி, பெருமை எல்லாவற்றையும் பரலோக பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கும் உண்டாகட்டும். மிகுந்த ஆஸ்தி வேண்டுமா? என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை வாசிக்க லிங்கை கிளிக் செய்து வாஞ்சையாய் வந்த உங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக எங்களுடைய அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயம் சர்வவல்ல தேவன் உங்களை நீதிமொழிகள் 10:22 -ன் படி ஆசீர்வதித்து உயர்த்துவாராக.
தலைவன் ஒருவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் வந்து ”நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். இதை பரிசுத்த வேதத்தில் லூக்கா 18:18-ல் வாசிக்கின்றோம். யார் இந்த தலைவன்? வயதான மனிதனாக இருப்பானோ? என்று கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் வயதான மனிதனல்ல வாலிபனாக இருந்தான். ஆஸ்தியும், ஐசுவரியமும் மிகுதியாக இவனிடம் காணப்பட்டது. வாலிப வயதில் ஐசுவரியம், ஆஸ்திகள் கூட கிடைத்துவிடும். ஆனால், தலைவன் என்ற கனம் எளிதில் கிடைக்காது. ஆனால், இவனுக்கு வாலிப வயதிலே எல்லாம் கிடைத்தது.
இன்றைய காலத்தில் அநேகருடைய இலக்கு வாலிப வயதில் எல்லாம் கிடைத்துவிட வேண்டும் என்பதாக இருக்கும். இந்த வாலிபனுக்கு எப்படி வாலிப வயதில் எல்லாம் கிடைத்தது என்பதனை அறிந்துகொண்டால் நாமும் பெற்றுக்கொள்ளலாம். இந்த தீர்க்கதரிசன செய்தியில் இந்த தலைவனுக்கு வாலிப வயதில் ஐசுவரியம், ஆஸ்தி, கனம் எப்படி கிடைத்தது? நமக்கு கிடைக்க என்ன செய்ய வேண்டும்? வாழும்போது ஆஸ்தியையும், ஐசுவரியத்தையும், வாழ்க்கைக்கு பின்பு நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? என்பதனை குறித்து தியானிக்க போகின்றோம். ஜெபத்துடன் வாசியுங்கள். உங்களுக்கு மிகுந்த ஆசீர்வாதமாக இருக்கும். இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன, பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.
இந்த வாலிபனுக்கு சிறுவயதில் இருந்தே நித்திய ஜீவனைக் குறித்த வெளிப்பாடு இருந்தது. எப்படி இந்த வெளிப்பாடு கிடைத்தது? சிறுவயது முதல் அவனுடைய பெற்றோர்கள் அவனுக்கு கருத்தாக போதித்திருப்பார்கள். எனவே, இந்த வெளிப்பாட்டினை பெற்றிருந்தான். மரணம் உண்டு மரணத்திற்குப் பின்பு ஒரு வாழ்க்கை உண்டு என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உடையவனாக இருந்தான். எனவே, சிறுவயது முதல் இவனுடைய வாஞ்சை, விருப்பம், ஆசை எல்லாம் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான். பெரிய மனிதர்கள், தீர்க்கதரிசிகள், போதகர்கள் யாரைப் பார்த்தாலும் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது அவனுடைய கேள்வி? அவர்கள் கூறும் ஆலோசனைகள், நியாயப் பிரமாணங்கள், கற்பனைகள், கட்டளைகள் போன்றவற்றை சிறு வயது முதல் கருத்தாக கைக்கொண்டான். விபச்சாரம், வேசித்தனம் செய்ததில்லை. தகப்பனையும், தாயையும் தூஷித்ததில்லை இப்படி பரிசுத்தமாக இருந்தான்.
இப்படி நித்திய ஜீவனைக்குறித்து சிறுவயது முதல் எச்சரிக்கையாக இருந்து, ஒவ்வொரு நாளும் தன்னை பரிசுத்தப்படுத்தி கொண்டதினால் பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம் அடைந்தான். இவனுடைய வாழ்க்கை சிறுவயது முதற்கொண்டு பரிசுத்தமாக இருந்ததினால் அவனோடு கர்த்தர் கூட இருந்தார். அவன் செய்கின்ற காரியம் வாய்த்தது. அவன் எந்த காரியத்தில் தலையீட்டானோ அதில் அவனுக்கு ஜெயம் கிடைத்தது. இதனால் வாலிப வயதில் மிகுந்த ஆஸ்தி, ஐசுவரியம் உள்ளவனாக மாறிவிட்டான்.
சர்வவல்ல தேவனுடைய ஞானம் அவனுக்குள் இருந்தது. எனவே, தலைவன் என்ற பதவியும், பட்டமும் அவனுக்கு தேடிவந்தது. ஜனங்களால் தலைவன் என்று அழைக்கப்படும் அளவிற்கு உயர்த்தப்பட்டான். வாலிப வயதில் அவனுக்கு தலைவன் என்ற பட்டமும் இருந்தது. ஆஸ்தியும், ஐசுவரியமும் இருந்தது.
இந்த வாலிபனைப் போல் நித்திய ஜீவனைப்பற்றி வெளிப்பாடுகளை யாரெல்லாம் பெற்றுக்கொள்கின்றார்களோ அவர்களும் இவனைப் போல ஆஸ்திகளையும், ஐசுவரியத்தையும், உயர்வையும், கனத்தைப் பெறுவார்கள்.
இதை வாசிக்கின்ற தேவனுடைய பிள்ளைகளே! நீங்களும் நித்திய ஜீவனைக்குறித்த வெளிப்பாட்டினை பெறுங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு ஒவ்வொரு நாளும் ஆயத்தமாகுங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையில் எடுக்கப்படுவீர்கள். ஒருவேளை அவருடைய வருகை தாமதமாகும் என்றால், இந்த பூமியில் வாழும் நாட்களில் ஆஸ்தியுள்ளவர்களாகவும், ஐசுவரியமுள்ளவர்களாகவும் வாழ்வீர்கள். தலைவன் என்ற பட்டமும், கனமும் உங்களை தேடிவரும்.
இதுவரை எப்படி ஐசுவரியமுள்ளவர்களாக மாறுவது என்பதனை வேதவசனத்தின் வழியாக அந்த வாலிபனுடைய வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொண்டோம். இனி அதை எப்படி தற்காத்துக்கொள்வது என்பதனையும், ஆஸ்திகள் அதிகமானாலும் நித்திய ஜீவனை இழக்காமல் இருப்பது எப்படி என்பதனையும், பூமியில் செல்வ சீமான்களாகளாகவும், நித்திய ஜீவனை உடையவர்களாகவும் வாழ்வது எப்படி என்பதனை குறித்து தியானிப்போம்.
சங்கீதம் 62:10-ல் ”ஐசுவரியம் விருத்தியானால் இருதயத்தை அதின்மேல் வைக்காதேயுங்கள்” என்று சங்கீதக்காரன் தாவீது கூறுகின்றான். இந்த பூமிக்குரிய வாழ்க்கையில் எவ்வளவுதான் ஆஸ்தி, ஐசுவரியம் கிடைத்தாலும் இருதயத்தை அதன் மேல் வைக்கக்கூடாது. ஆசீர்வாதத்தினை பார்த்து ஆசீர்வதிக்கின்றவரை விட்டுவிடக்கூடாது என்று பரிசுத்த வேதவசனம் கூறுகின்றது.
இந்த வாலிபன் நித்திய ஜீவனுக்கு தன்னைத் தயார்படுத்தினான். எனவே, சர்வவல்ல தேவன் அவனை ஐசுவரியவானாக்கினார். ஆஸ்தியுள்ளவனாக இருந்தான். நாட்கள் செல்ல செல்ல ஆசீர்வாதத்தின் மீது மிகுந்த ஆசைவைத்துவிட்டான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் வந்து நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள என்னிடத்தில் என்ன குறை உண்டு என்று கேட்கும்போது, ”உனக்கு உண்டான ஆஸ்தி, ஐசுவரியம் எல்லாவற்றையும் விற்று தரித்திரருக்குகொடு பின்பு என்னைப் பின்பற்றி வா” என்று கூறினார். அவனுக்கோ ஆஸ்தியின் மீது ஆசையிருந்தபடியினால் துக்கத்தோடு சென்றுவிட்டான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைக்கு கீழ்படிய முடியவில்லை, நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. அப்பொழுதுதான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களை நோக்கி: ”ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும்” என்று சொன்னார்.(மத்தேயு 19:24, மாற்கு 10:17, லூக்கா 18:18)
நித்திய ஜீவனைக்குறித்து வெளிப்பாடுகளை பெற்றுக்கொள்ளும் போதும், அதற்கு தன்னை ஆயத்தமாக்கும் போதும் ஆஸ்தி, ஐசுவரியம், கனம், உயர்வு கிடைக்கும். ஆனால், அதன் மீது நம்முடைய இருதயம் செல்லாதபடிக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எப்பொழுது வேண்டுமென்றாலும் கிடைத்த உயர்வை இழக்க ஆயத்தமாக இருக்கவேண்டும். அப்படியிருந்தால் நித்திய ஜீவனும் கிடைக்கும், பூமியிலும் ஐசுவரியவான்களாக வாழலாம். விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாம் அப்படித்தான் செல்வ சீமானாக இருந்தான். பரலோகத்தினையும் பெற்றுக்கொண்டான்.(ஆதியாகமம் 13:2)
(பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். CLICK HERE
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP - ல் இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Really very useful message let Lord Jesus help you in all messages
ReplyDelete